கோடிக்கணக்கில் வருவாய் வரக்கூடிய இந்து சமய அறநிலையத் துறையை மத்திய தணிக்கைத் துறை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசியல் சாசன சட்டத்தின் மூலம் தன்னாட்சி பெற்ற அமைப்பாக தலைமை தணிக்கை துறை செயல்பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுத் துறைகளின் வரவு செலவுகள், வருவாய் இழப்புகள், அநாவசிய செலவுகள் போன்றவற்றை கண்டறியவும்; மக்களின் வரிப்பணம் வீணடிக்கபடுவதை தவிர்க்கவும் தன்னாட்சி பெற்ற தணிக்கை அமைப்பு ஏற்படுத்தபட்டுள்ளது. அந்த வகையில் மத்திய மாநில அரசுகளின் அனைத்து துறைகளும் தணிக்கை செய்யபடுகின்றன.
உதாரணமாக நம் நாட்டின் மாபெரும் ஊழலான 2ஜி அலைவரிசை ஊழல், தணிக்கை துறை அறிக்கை மூலமே கண்டறியபட்டது. எனவே வருடாந்திர தணிக்கை அவசியமானதாக உள்ளது. அதன் மூல பல ஊழல்கள், வருவாய் இழப்புகள் கண்டறியபட்டுள்ளன என்பது வரலாறு.
ஆங்கிலேய அரசு காலத்தில் இந்து கோயில்களின் வரவு செலவுகளை மட்டுமே ஆய்வு செய்யும் அமைப்பாக இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வந்தது. சுதந்திரத்துக்கு பிறகு இந்து கோயில்களின் தங்க, வைர, வெள்ளி பொக்கிஷங்கள், உண்டியல் வருவாய், சொத்துகளின் வருவாய், நிலங்கள், கட்டிடங்கள் போன்ற அனைத்தையும் நிர்வகிக்கும் ஏகபோக உரிமையாளராக இந்து சமய அறநிலையத் துறை மாறிவிட்டது.
மாநில அரசின் அனைத்து துறைகளும் தணிக்கைக்கு உட்படுத்தபடும்போது மாநில அரசின் இதர துறைகள் போல தனி அமைச்சகத்துடன் செயல்படும் இந்து சமய அறநிலையதுறையும் தணிக்கைக்கு உட்படுத்தபடவேண்டியது அவசியமாகும். ஆனால் மாநில அரசும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பலவிதமான சாக்கு போக்குகளைச் சொல்லி இந்து சமய அறநிலையத் துறையை தணிக்கைக்கு உட்படுத்துவதை தவிர்த்து வருகிறார்கள்.
அரசு நிதி ஒதுக்கப்படும் அனைத்து துறைகளும் தணிக்கை செய்யப்படவேண்டும் என்பது சட்டம். தமிழக முதல்வரும் மற்றும் இந்து சமய அறநிலையதுறை அமைச்சரும் மேடைதோறும் இந்து சமய அறநிலையத் துறைக்கு ஏராளமான நிதி ஒதுக்கியதாக பெருமைபட்டுகொள்கிறார்கள். ஆனால் தணிக்கைக்கு உட்படுத்தவேண்டும் என்றால் இந்து சமய அறநிலையத் துறை தணிக்கை சட்ட வரம்புக்கு வராது என்று பம்முகிறார்கள். இதற்கு துறையின் உயர் அதிகாரிகளும் ஒத்துபோகிறார்கள். அந்த வகையில் துறையின் உயர் அதிகாரிகளும் ஆளும் திமுக அரசும் ஏதோ ஒரு பெரிய விஷயத்தை மூடி மறைக்க பார்க்கிறார்களோ என்று மக்கள் சந்தேகிக்கத் துவங்கி விட்டனர்.
லட்சகணக்கான ஏக்கர் நிலமும், கட்டிடங்களும், கோடிகணக்கில் வருவாயும் வருகிற இந்து சமய அறநிலையத் துறையின் வரவு செலவுகளை தணிக்கை செய்யகூடாது என்பது பெரிய அளவிலான முறைகேடுகளை மூடி மறைக்கப் பார்க்கும் சதி என்றே கருத வேண்டியுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி கோயில் நிர்வாகத்துக்கு அறங்காவலர் குழு அத்யாவசியமானது. ஆனால் 23,500 கோயில்களில் அறங்காவலர் குழுவே நியமிக்கபடவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபோன்று இன்னும் எத்தனை முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகள் வெளிவராமல் இருக்கின்றனவோ என்பது கோவில்களின் நிலை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வப்போது வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் இந்து சமய அறநிலையதுறையின் நிர்வாக சீர்கேடுகளை இந்து முன்னணி சுட்டிகாட்டி வந்துள்ளது. ஆனால் எதுவும் மாறியதாக தெரியவில்லை. எனவே, காலியாக உள்ள அறங்காவலர் குழுக்களை உடனடியாக நியமிக்க வேண்டும். மேலும், அறநிலையத்துறையின் ஒட்டுமொத்த வரவு செலவு சொத்து கணக்கு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தலைமை கணக்கு அமைப்பின் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது” என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.