தென் மாவட்டங்களில் கனமழை பெய்துவருவதையொட்டி அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது அணைகளின் நீர் இருப்பை கண்காணிக்க வேண்டும் என்றும் அணைகளில் இருந்து நீரினை திறந்து விடும் போது பொது மக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.
இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பதிவானதன் காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதால், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேற்று (13.12.2024) முதல்வர் ஸ்டாலின், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக, கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகள் குறித்தும் கேட்டறிந்து தேவையான அறிவுரைகள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, முதல்வர் தலைமையில் இன்றையதினம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், அணைகளின் நீர் இருப்பை கண்காணிக்க வேண்டும் என்றும், அணைகளிலிருந்து நீரினை திறந்துவிடும் போது பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் முன்னதாகவே தங்க வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
கனமழையால் ஏற்பட்ட பயிர் சேத விவரங்கள் உட்பட அனைத்து சேத விவரங்களையும் துரிதமாக கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்தி வருகின்றனர். மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள, இந்திய ஆட்சிப் பணி நிலையிலான கண்காணிப்பு அலுவலர்களும் தொடர்புடைய மாவட்டங்களில் முகாமிட்டு மாவட்ட நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்புப் பணியில் மாவட்ட நிருவாகத்திற்கு உதவி புரியும் வகையில் திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தலா ஒரு குழு வீதம், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி, தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழு திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அந்தமான் கடல் பகுதியில் 15.12.2024 அன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என அறிவித்துள்ளது. அதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஏற்படவுள்ள மழை குறித்தும் முதல்வர் விவாதித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்தக் கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வருவாய் நிருவாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.