நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 23-ம் ஆண்டு தினம் – உயிர்நீத்தவர்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி

கடந்த 2001ம் ஆண்டு இன்று இதே நாளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்தின் மீது நடத்திய தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 23ம் ஆண்டை முன்னிட்டு இந்த தாக்குதலில் உயிர்தியாகம் செய்தவர்களின் புகைப்படங்கள் நாடாளுமன்ற வளாகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த படங்களுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த தாக்குதலை தனது எக்ஸ் பக்கத்தில் நினைவுகூர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “2001 நாடாளுமன்ற தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர்களின் தியாகம் என்றென்றும் நம் தேசத்தை ஊக்குவிக்கும். அவர்களின் துணிச்சலுக்கும் அர்ப்பணிப்புக்கும் நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலின் போது கடமையில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த வீரத் தியாகிகளுக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களின் துணிவும் தியாகமும் என்றும் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும். நமது ஜனநாயகத்தின் புனிதத்தைப் பாதுகாப்பதில் அவர்கள் காட்டிய அர்ப்பணிப்புக்கு நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “2001 ஆம் ஆண்டு இதே நாளில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக நாடாளுமன்றத்தை காக்க தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். அவர்களின் துணிச்சலும், தியாகமும் என்றும் மறக்க முடியாதவை. அவர்களின் குடும்பத்தினருடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். வீரமரணம் அடைந்த மாவீரர்களின் நினைவைப் போற்றும் வகையில், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா உறுதியாகவும் ஒற்றுமையாகவும் உள்ளது.” என கூறியுள்ளார்.

2001ல் நடந்த நாடாளுமன்ற தாக்குதலை பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகம்மது ஆகிய பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் நடத்தினர். அவர்களுக்கு எதிராக இந்திய பாதுகாப்புப் படையினர் துணிச்சலுடன் சண்டையிட்டனர். இந்த மோதலில் 5 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதேநேரத்தில், இந்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். தோட்டக்காரர் ஒருவரும் கொல்லப்பட்டார்.