அரசமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும் அரசியலமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளையும் ஆளும் கட்சி (பாஜக) மேற்கொண்டது என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.

வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக பிரியங்கா காந்தி மக்களவையில் இன்று உரையாற்றினார். இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி நடந்த விவாதத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத்தைப் பாதுகாக்கும் போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நம் நாட்டில் உரையாடல் மற்றும் விவாதத்துக்கு ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரியம் உள்ளது. இந்த பாரம்பரியம் எல்லா மதங்களிலும், தத்துவ நூல்களிலும், வேதங்களிலும், உபநிடதங்களிலும் காணப்படுகிறது. விவாதமும் உரையாடலும் நமது கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக இருந்து வருகிறது.

அகிம்சை மற்றும் உண்மையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் பாரம்பரியத்தில் இருந்துதான் நமது சுதந்திரப் போராட்டம் உருவானது. இது மிகவும் ஜனநாயக ரீதியாக நடந்த போராட்டம். விவசாயிகள், தொழிலாளர்கள், அறிவுஜீவிகள் என பல்வேறு தரப்பினரும் இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் பங்கேற்றனர். சுதந்திரத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து போராடினார்கள். இந்த சுதந்திரப் போராட்டத்தில் இருந்து, நாட்டின் குரல் எழுப்பப்பட்டது.

நமது அரசியலமைப்புச் சட்டம், தைரியம் மற்றும் சுதந்திரத்தின் குரல். நமது அரசியலமைப்பு நீதி, நம்பிக்கை மற்றும் லட்சியத்தின் சுடர். இது ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் எரிகிறது. இந்த வெளிச்சம் ஒவ்வொரு இந்தியனுக்கும் நீதியைப் பெறுவதற்கான உரிமையையும், தனது உரிமைகளுக்காக குரல் எழுப்பும் திறனையும் கொடுத்துள்ளது.

இந்த அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசாங்கத்தை அமைக்கவும் மாற்றவும் உரிமை வழங்கியுள்ளது. இந்த சுடர் ஒவ்வொரு இந்தியனுக்கும் நாட்டின் செல்வத்தில் தனக்கும் பங்கு உண்டு என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. பாதுகாப்பான எதிர்காலத்திற்கான உரிமை இந்தியர்களுக்கு உள்ளது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இந்த நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புச் சுடரை நான் பார்த்திருக்கிறேன்.

உத்தரப்பிரதேசத்தின் உன்னாவோவில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குச் சென்றேன். அவருடைய வயல்வெளிகள் எரிக்கப்பட்டன. அவருடைய சகோதரர்கள் தாக்கப்பட்டனர். அந்த பெண்ணின் தந்தையை சந்தித்தேன். சிறுமியின் தந்தை என்னிடம் கூறும்போது, “எனக்கு நீதி வேண்டும். எனது மகள் தனது மாவட்டத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யச் சென்றபோது, ​அதற்கு மறுத்துவிட்டார்கள். பின்னர் அவர் வேறு ஒரு மாவட்டத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.

அவள் தினமும் காலையில் எழுந்து தனியாக ரயிலில் வேறொரு மாவட்டத்திற்குச் சென்று தன் வழக்கை நடத்துகிறார். இந்த போராட்டத்தைக் கைவிடுமாறு நான் அவளை சமாதானப்படுத்துவேன். ஆனால் சிறுமி, ‘அப்பா, இது என்னுடைய போராட்டம், நான் போராடுவேன்’ என்றார்.” என தெரிவித்தார்.

அந்த பெண்ணுக்கும், நாட்டின் கோடிக்கணக்கான பெண்களுக்கும் நமது அரசியல் சாசனம் அத்தகைய தைரியத்தை அளித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டம்தான் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பு கவசமாக உள்ளது. இது நீதி மற்றும் ஒற்றுமைக்கான கவசம். கடந்த 10 ஆண்டுகளில், ஆளும் தரப்பைச் சேர்ந்த சகாக்கள் இந்த பாதுகாப்பு கவசத்தை உடைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது வருத்தமளிக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் வாக்குறுதிகள் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியை ஒவ்வொருவரும் பெற உறுதியளிக்கின்றன.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வேறுமாதிரி இருந்திருந்தால், அரசியலமைப்பு சட்டத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால், நாட்டு மக்கள் நாட்டின் அரசியல் சாசனத்தை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்திவிட்டார்கள். இந்த தேர்தலில் கிட்டத்தட்ட தோல்வியை சந்திக்க நேரிட்டதால், அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவது பற்றிய விவாதங்கள் இந்த நாட்டில் வேலை செய்யாது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்” என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.