புதுக்கோட்டை மாநகராட்சி, பழைய பேருந்து நிலையத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் நுகர்வோர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவில் நுகர்வோர் விழா கல்வி நிறுவனங்களில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் நுகர்வோர் தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் ஆகியோர்களை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாணக்கர்களுக்கு போட்டிகள் மற்றும் பேரணி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதன்படி, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான பதாகைகளைக் கொண்டு கல்லூரி/பள்ளிகளில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்படுகிறது.
இந்த நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டது. இப்பேரணியானது, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி, கீழராஜ வீதி, பிருந்தாவனம் வழியாக நகர்மன்றத்தை சென்றடைந்தது. இப்பேரணியில், புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி, மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கலந்து கொண்டனர்.
எனவே, நுகர்வோர்களின் பாதுகாப்பு நலன்களை கருத்தில் கொண்டு தொடர்புடைய அரசு அலுவலர்கள் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சே.கி.குணசேகரன், வட்டாட்சியர் பரணி, மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் பா.ஜெயராமன், மண்டல துணை வட்டாட்சியர் ஆ.லட்சுமணன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.