இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேர் தாயகம் திரும்பினர்.
கடந்த நவ.9-ல் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி படகுகளிலிருந்த 23 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். டிச. 23-ல் ஊர்காவல்துறை நீதிமன்றம், இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடித்தால் மீண்டும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்பைடயில் 20 மீனவர்களை விடுதலை செய்தும், விசைப்படகு ஓட்டுநர்களான 3 பேருக்கு தலா ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கியும் தீர்ப்பளித்தது.
முன்னதாக 22.06.2024 அன்று ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஒரு விசைப்படகை கைப்பற்றி, அதிலிருந்த 7 மீனவர்களில், விசைப்படகு ஓட்டுநர் காளீஸ்வரன் என்பவருக்கு மட்டும் ஓராண்டு, சிறை தண்டனையும் அபராதமும் விதித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. காளீஸ்வரனின் சிறை தண்டனையையும், அபராதத்தையும் ரத்து செய்யக் கோரி அவரது குடும்பத்தினர் சார்பாக யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு நவம்பர் 7-ல் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலை செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களும் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு திங்கட்கிழமை இரவு சென்னை வந்தடைந்தனர். அங்கிருந்து அவர்களை மீன்வளத்துறையினர் தனி வாகனங்கள் மூலம் இன்று காலை ராமேசுவரம் அழைத்து வந்தனர்.