அதானி விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவதால் பாஜக மக்களவையை செயல்பட அனுமதிப்பதில்லை என்று காங்கிரஸ் முக்கியத் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி வதேரா, “அவையை நடத்த அரசு விரும்பவில்லை அல்லது அவர்கள் அவையை நடத்தத் தகுதியற்றவர்கள். நாடாளுமன்றத்துக்கு வெளியே எங்கள் போராட்டம் காலை 10:30 மணி முதல் 11 மணி வரை நடக்கும். பின்னர் நாங்கள் மக்களவைக்குச் செல்கிறோம். ஆனால், வேலை நடப்பதில்லை. அவையில் நாங்கள் அமர்ந்தவுடன் அவர்கள் சபையை ஒத்திவைக்க எதையாவது தொடங்குகிறார்கள். இது அவர்களின் உத்தி என்று நான் நினைக்கிறேன். அவர்கள் விவாதத்தை விரும்பவில்லை.
அதானி விவகாரம் குறித்து விவாதிக்க அரசாங்கம் பயப்படுகிறது. ஏனெனில், அனைத்து பிரச்சினைகளும் வெளிப்படையாக வெளிப்படும் என்பது அவர்களுக்குத் தெரியும். நான் அவைக்கு புதியவள். பிரதமர் நாடாளுமன்றத்துக்குக் கூட வருவதில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. மக்களின் மின் கட்டணத்தை உயர்த்தி லாபம் ஈட்டுவதற்காக அவர்கள் (அதானி) கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்காவில் கூறப்படுகிறது. எனவே, இந்த குற்றச்சாட்டு குறித்து விவாதிப்பது முக்கியம்” என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அமெரிக்காவின் ஜார்ஜ் சோரோஸுடன் கூட்டு இருப்பதாக பாஜக முன்வைக்கும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரியங்கா காந்தி வத்ரா, “அவர்கள் கொண்டு வரக்கூடிய மிகவும் அபத்தமான விஷயம் இது என்று நான் நினைக்கிறேன். அதானியைப் பற்றி விவாதிக்க விரும்பாததால்தான் அவர்கள் இதைச் செய்கிறார்கள்” என்று கூறினார்.
முன்னதாக, அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸ் மற்றும் இந்திய எதிர்ப்பு சக்திகளுடன் காங்கிரஸும் அதன் தலைமையும் கூட்டுச் சேர்ந்து, மக்களவையை குழப்பத்தில் ஆழ்த்தி, நாள் முழுவதும் ஒத்திவைக்க வழிவகுப்பதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.