நாடாளுமன்ற செயல்பாடுகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்படுவதால் எம்.பி.களை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா கடுமையாக எச்சரித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஊடக நிறுவனங்களுக்கு அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் நிதியுதவி வழங்கியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பாஜக மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே நேற்று இன்று அமளி ஏற்பட்டது. இதைத் தெடார்ந்து, மக்களவை, மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அவையை முடக்கும் வகையில் செயல்படும் எம்.பி.க்கள் குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடுமையான விமர்சனம் செய்தார்.
இது குறித்து அவர் கூறும்போது, “உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தை நாம் கொண்டுள்ளோம். 100 கோடிக்கும் அதிகமான மக்களின் நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் நிறைவு செய்யும் இடம் நாடாளுமன்றம். அதன் கண்ணியத்தை நாம் பாதுகாக்க வேண்டும். ஆனால், தற்போது நடைபெறும் நிகழ்வுகள் அதற்கு எதிராக உள்ளது. இது தொடர்வது நல்ல விஷயம் அல்ல என்பது எனது கருத்து.
எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி ஒவ்வொருவரும் கண்ணியத்தை காக்கும் வகையில் செயல்பட வேண்டும். நாடாளுமன்றம் என்ற ஜனநாயக கோயிலில் இருந்து நேர்மறையான செய்திகள் வெளிவரும் வகையில் எம்.பி.க்கள் அனைவரும் தங்களது பொறுப்பினை உணர்ந்து செயலாற்ற வேண்டும். கருத்து உடன்பாடு மற்றும் கருத்து வேறுபாடு நல்ல ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடிப்படை. ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் ஒருவொருக்கொருவர் அமர்ந்து பேசி பிரச்சினைகளுக்கு சுமுகமான முறையில் தீர்வு காண வேண்டும்” என்று சபாநாயகர் கூறினார்.