புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது; பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 415 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரவி என்பவர் பழுதடைந்த கைதாங்கியினை மாற்றித்தர கோரிக்கை மனு அளித்ததைத் தொடர்ந்து, உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், புதிய கைதாங்கி வழங்கப்பட்டது.
மேலும், சாலை விபத்தில் பாதிப்பிற்குள்ளான ஆவுடையார்கோவில் வட்டத்தைச் சேர்ந்த சேட் என்ற மாற்றுத்திறனாளி உதவி வேண்டி கோரிக்கை மனு அளித்ததைத் தொடர்ந்து, உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், உடனடியாக சிறப்பு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID), மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை மற்றும் சிறப்பு மடக்கு சக்கர நாற்காலி ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் மாதாந்திர உதவித்தொகை வழங்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.ஷோபா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர்பாஷா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.