“டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் முதல்வர் பொறுப்பில் இருக்கமாட்டேன்” – சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேச்சு

“எக்காரணம் கொண்டும், தமிழகத்துக்குள் டங்ஸ்டன் சுரங்க திட்டம் வரக்கூடிய வாய்ப்பே இல்லை. அதை தடுத்து நிறுத்துவோம். ஒருவேளை டங்ஸ்டன் சுரங்கம் வந்தால், இந்த முதல்வர் பொறுப்பில் நான் இருக்கமாட்டேன்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் அரசின் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அரசின் தனித் தீர்மானத்தின் மீது பேரவை உறுப்பினர்கள் பேசினர்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “மத்திய அரசு இந்த ஆண்டு டங்ஸ்டன் சுரங்கத்துக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டு, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தின் உரிமம் இறுதி செய்யப்படும் வரை அரசு அமைதியாக இருந்துள்ளது. மாநில அரசின் கோரிக்கையை மத்திய சுரங்கத்துறை நிராகரித்ததாக வந்த செய்தி மதுரை மாவட்ட மக்களுக்கு சென்றடைந்து அப்பகுதி மக்கள், ஆர்ப்பாட்டத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டதால், டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது” என குற்றம்சாட்டினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அவை முன்னவர் துரைமுருகன், பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் பதிலளித்துப் பேசினார். இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எதிர்க்கட்சித் தலைவர், “நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் இத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்று பெருமையாக பேசுகிறீர்களே, என்ன செய்தீர்கள்?” என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.

நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள், சுரங்கம் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்துள்ளனர். நான்கூட எதிர்க்கட்சித் தலைவர் ஆதாரமின்றி பேசமாட்டார் என்று நினைத்தேன். ஆனால், இந்த விவகாரத்தில் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக இதை எதிர்த்துள்ளனர். அதுமட்டுமல்ல, மதுரையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அம்மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி அங்கு சென்று அந்தப் போராட்டத்தின் தன்மையைப் பற்றி அறிந்துகொண்டு, போராட்டத்தைக் கைவிடவும், உங்களுக்கு ஆதரவாக இந்த அரசு இருக்கும் என்று உறுதி அளித்திருந்தார். இதுதொடர்பாக முதல்வரே கடிதம் எழுதியிருக்கிறார் என்ற விவரத்தைக் கூறி, சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வரப்போகிறோம் என்பதையும், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்து வந்தார்.

இந்த சட்டத்திருத்தம் கொண்டு வந்தபோது, நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறோம். அது நாடாளுமன்றத்தில் பதிவாகியிருக்கிறது. மத்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தை எங்களால் எப்படி தடுத்திருக்க முடியும்? மத்திய அரசு பெரும்பான்மையாக இருக்கும்போது எப்படி அவ்வாறு செய்ய முடியும்? எதிர்க்கட்சித் தலைவரும், காவிரி விவகாரத்தில் அதிமுக குரல் கொடுத்ததாகவும், சபையை நடக்கவிடாமல் செய்ததாக பலமுறை கூறியிருக்கிறார். அப்போது மத்திய அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை அதிமுக தடுத்து நிறுத்திவிட்டதா?

இந்த விவகாரத்தில், காலதாமதம் செய்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் பேசியிருக்கிறார். அவர்கள் பார்வையில் அவ்வாறு இருக்கலாம். நாங்கள் தவறிவிட்டதாக கூட இருக்கலாம். இந்த விவகாரத்தை நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. அவ்வப்போது நாங்கள் இந்த பிரச்சினையை சுட்டி காட்டியிருக்கிறோம், கடிதம் எழுதியிருக்கிறோம். அதனால்தான், நான் திரும்பத்திரும்ப கூறுகிறேன், எக்காரணத்தைக் கொண்டும், தமிழகத்துக்குள் டங்ஸ்டன் சுரங்க திட்டம் வரக்கூடிய வாய்ப்பே இல்லை. அதை தடுத்து நிறுத்துவோம். ஒருவேளை டங்ஸ்டன் சுரங்கம் வந்தால், இந்த முதல்வர் பொறுப்பில் நான் இருக்கமாட்டேன். எனவே தயவுகூர்ந்து, இந்த தனித் தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

அதிமுக – திமுக காரசார விவாதத்துக்குப் பின்னர், டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக பேரவையில் நிறைவேற்றப்பட்டது.