ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா

ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்ட பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வாசகர் பேரவை செயலாளர் பேராசிரியர் எஸ்.விஸ்வநாதன் தலைமைவகித்தார். அவர் தனது தலைமையுரையில், எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தை கல்வித்துறையின் ஒத்துழைப்புடன் மிகச்சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தில் பங்குபெறும் மாணவர்களின் சிந்தனை, செயல்பாடு மற்றும் அறிவியலில் அவர்களின் கண்ணோட்டம் ஆகியவை மேம்பட்டதாக இருக்கும். மேலும் இப்பயிற்சியில் பங்குபெறும் மாணவர்கள் தங்கள் வேலைகளை தாங்களே செய்து கொள்ளும் அளவிற்கு அவர்களின் மனப்பான்மை மாறியுள்ளது என்பதை அவர்களின் செயல்பாட்டில் இருந்து அறியலாம் என்றார். நிகழ்ச்சியில் குழந்தைகள் நலக்குழுமத் தலைவர் கே.சதாசிவம், அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இருந்து 15 நாட்கள் பயிற்சியை முடித்த 30 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் இந்த திட்டம் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகளுக்குகிடைத்த மிக அற்புதமான திட்டம். இதில் பங்குபெறும் ஒவ்வொரு மாணவர்களும் பிற்காலத்தில் தலைசிறந்த குடிமகனாக உருவாகுவார்கள் என்றார்.

நிகழ்வில் அரசு முன்மாதிரி பள்ளியின் தலைமையாசிரியர் சிவபிரகாசம் இந்த திட்டத்திற்கு எங்கள் பள்ளி மாணவர்களை அழைத்து வந்து பயிற்சி அளித்த எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் அதற்கு உறுதுணையாக நின்ற கல்வித்துறைக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார். மேலும் இத்திட்டத்தில் பங்குபெற்ற மாணவர்களை தங்கள் பள்ளியிலுள்ள அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் அவர்களின் திறமையை வெளிக்கொணரச் செய்து பாராட்டினார். மாணவர்கள் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விஞ்ஞானி திட்டத்தில் தாங்கள் என்னென்ன கற்றுக் கொண்டோம், அது எங்களுக்கு எவ்வாறு உதவியாய் அமைந்தது, குறிப்பாக அறிவியல் கண்ணோட்டத்தை எங்களுக்கு அளித்துள்ளது என்று பகிர்ந்து கொண்டார்கள். தாங்கள் செய்த அறிவியல் தொடர்பான மாதிரிகளை விளக்கி கூறினார்கள். இந்நிகழ்விற்கு எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி.ப.மணிகண்டன் அனைவரையும் வரவேற்றார். இத்திட்டத்தின் ஆசிரியர் பா.மீனா நன்றி கூறினார்.