விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த 7 அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் மறுஅறிவிப்பு வரும் வரை விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத மழையால் விழுப்புரம் மாவட்டத்தில் கடும் வெள்ளச்சேதம் ஏற்பட்டது. இதனால் கடந்த 26ம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஒரு வாரம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. ஒரு வார விடுமுறைக்கு பின் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் திறக்கப்பட்ட நிலையில் 7 அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் சேதமடைந்த பள்ளிகளில் மறுசீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள அரசு பள்ளிகளின் விவரம் பின்வறுமாறு, திருவெண்ணைநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் சிறுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மரக்காணம் ஒன்றியம் ஓமந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மரக்காணம் ஒன்றியம் நாரவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மரக்காணம் ஒன்றியம் கந்தாடு அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளி, மரக்காணம் ஒன்றியம் வண்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மரக்காணம் ஒன்றியம் கீழ்சித்தாமூர் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.