கவிராசன் இலக்கியக் கழகம் சார்பில் பாரதியாரின் 143-ஆவது பிறந்த நாள் விழா புதுக்கோட்டையில் நடந்தது

கவிராசன் இலக்கியக் கழகம் சார்பில், மகாகவி பாரதியாரின் 143-ஆவது பிறந்த நாள் விழா, புதுக்கோட்டையில், சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது.

விழாவுக்கு, இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகள் குடும்ப நலப் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் கோ.ச.தனபதி தலைமை வகித்தார். நீதான் இளைஞர் அமைப்பின் தலைவர் மு.செல்வக்குமார் முன்னிலை வகித்தார்.

விழாவை ஒட்டி, இந்திய அளவில்  கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு இருந்தது. இந்தப் போட்டியில் முதல் பரிசு வென்ற நாகப்பட்டினம் மகா.இராஜராஜ சோழன், இரண்டாம் பரிசு வென்ற புதுக்கோட்டை க.கோவிந்தசாமி மற்றும் மூன்றாம் பரிசு வென்ற திருச்சி நந்தவனம் சந்திரசேகரன் ஆகியோருக்கு, ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி, புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர், கவிஞர் தங்கம் மூர்த்தி சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற “இசைக்கலைமணி” இராஜபாளையம் உமாசங்கர், “பாட்டுத் திறத்தாலே” என்ற தலைப்பில், இசையுரை நிகழ்த்தினார். முன்னதாக, கவிராசன் இலக்கியக் கழகத்தின் செயலாளர் மகா.சுந்தர் வரவேற்புரையும், தலைவர் கவி. முருகபாரதி நோக்கவுரையும் ஆற்றினார். விழா நிறைவில், பொருளாளர் கி. ஹரிமோகன் நன்றி கூறினார்.

விழாவில், புதுக்கோட்டையின் சேவை மற்றும் இலக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள், கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களின் இயக்குனர்கள், பாரதி அன்பர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.