தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிப்பு

தமிழக மீனவர்கள் 8 பேரை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

ராமேசுவரம் அருகே மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை 324 விசைப்படகுகள் அனுமதி டோக்கன் பெற்று சுமார் 1,600 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் கார்த்திக் ராஜா, சகாய ஆண்ட்ரிஸ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் சிறைப்பிடிக்கப்பட்டது.

படகுகளிலிருந்த கண்ணன், காளி, முத்துராஜ், பத்ரப்பன், யாசின், சேசு, ராமகிருஷ்ணன், வேலு ஆகிய 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறையிலுள்ள இலங்கை கடற்படை முகாமிற்கு கொண்டுச் செல்லப்பட்டனர். 8 மீனவர்களும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது. மேலும், கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை 69 தமிழக மீனவர்களின் படகுகளை சிறைப்பிடித்து 537 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.