ரயிலில் திருச்சி வந்த பயணியிடம் ரூ.75 லட்சம் பணம் : உரிய ஆவணம் இல்லாததால் ஆர்பிஎப் பறிமுதல்

திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.75 லட்சம் பணத்தை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

ஹவுராவிலிருந்து புறப்பட்ட ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் ஆறாவது நடைமேடைக்கு இன்று அதிகாலை 2:30 மணி அளவில் வந்து சேர்ந்தது. அதிலிருந்து பயணிகள் இறங்கி வெளியே வந்தனர். அதிலிருந்து ஒரு பயணி நான்காவது நடைமேடை வழியாக நடந்து சென்றார்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) இன்ஸ்பெக்டர் கே.பி.செட்டாஸ்டியன் தலைமையிலான போலீஸார், அந்தப் பயணியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாக அவர் பேசியதை தொடர்ந்து அவர் கையில் இருந்த கருப்பு நிற பையை பரிசோதித்தனார். பையில் கட்டு கட்டாக பணம் இருந்தது. இதையடுத்து போலீஸார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பது தெரியவந்தது. ஆனால் அவர் கொண்டு வந்த பணம் குறித்து அவர் முறையான பதில் ஏதும் தெரிவிக்கவில்லை மேலும் அதற்குரிய ஆவணங்களும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ஆர்பிஎப் போலீஸார் வருமான வரித் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருச்சி துணை இயக்குனர் டி.ஸ்வேதா தலைமையிலான வருமானவரித் துறை அலுவலர்கள் ரயில் நிலையத்துக்கு வந்து, கட்டு கட்டாக இருந்த பணத்தை எண்ணிப் பார்த்ததில் ரூ.75 லட்சம் இருந்தது தெரிய வந்தது. பணத்தை பறிமுதல் செய்த வருமான வரித் துறை அதிகாரிகள் ஆரோக்கியதாஸிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் ப்ரோ 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை ஆவணங்கள் இன்றி ரயிலில் கொண்டு சென்ற ஒருவரை ஆர்பிஎப் போலீஸார் பிடித்து வருமான வரித் துறை இடம் ஒப்படைத்தனர். அந்த நகை பணத்துக்கு உரிய ஜிஎஸ்டிவரி கட்டாததால் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டது. இதையடுத்து ஜிஎஸ்டி திருச்சி இணை இயக்குநர் ஜானகி, ஆர்பிஎஃப் போலீஸாருக்கு நற்சான்றிதழ் வழங்கி அண்மையில் பாராட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், ஆர்பிஎஃப் போலீஸார் இன்று ஆவணங்களின்றி 75 லட்சம் பணத்தை கொண்டு வந்த பயணியை பிடித்து வருமான வரித் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.