முல்லை பெரியாறு அணையில் ஆண்டு பராமரிப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் : இபிஎஸ்

முல்லை பெரியாறு அணையில் ஆண்டு பராமரிப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என திமுக அரசை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாய தேவைக்காகவும், பலமாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் முல்லைப் பெரியாறு அணையில், தமிழக நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் (பொதுப்பணித் துறை) ஆண்டுதோறும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது வழக்கம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 2020-21 வரை, முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கோள்ள கேரள வனத்துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, பராமரிப்புப் பணிகள் எந்தவிதமான இடையூறுமின்றி மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், ஸ்டாலினின் திமுக ஆட்சியில், இந்த ஆண்டு வழக்கம்போல் முல்லைப் பெரியாறு அணையில் மராமத்துப் பணிக்காக தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் கட்டுமானப் பொருட்களை மூன்று நாட்களுக்கு முன்பு இரு லாரிகளில் கொண்டுசெல்லும்போது வல்லக்கடவு என்ற இடத்தில், கேரள வனத்துறை சோதனைச் சாவடியில் கட்டுமானப் பொருட்களைக் கொண்டுசென்ற இரு லாரிகளும் தடுத்து நிறுத்தப்பட்டன என்று செய்திகள் வருகின்றன.

கேரள நீர்வளத் துறையிடம் (பொதுப்பணித் துறை) அனுமதி பெற்ற பின்னரே கட்டுமானப் பொருட்கள் கொண்டுசெல்லப்படுவதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், தங்களுக்கு இதுகுறித்து எந்தத் தகவலும் வராததால், அவற்றை அனுமதிக்க மாட்டோம் என்று நேற்று வரை கேரள வனத் துறை, கட்டுமானப் பொருட்கள் கொண்டு சென்ற லாரிகளை முல்லை பெரியாறு பகுதிக்குள் அனுமதிக்கவில்லை.

இச்செய்தியை அறிந்த, முல்லைப் பெரியாறு அணையை நம்பியுள்ள ஐந்து மாவட்ட மக்களும் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தமிழக-கேரள எல்லையான தேனி மாவட்டம், லோயர்கேம்ப் பகுதியில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதை, தமிழக காவல் துறை தடுத்து நிறுத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்வதற்குத் தேவையான அனுமதி பெறாமல் வேடிக்கை பார்க்கும் ஸ்டாலினின் திமுக அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். முல்லை பெரியாறு அணையில் ஆண்டு பராமரிப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.