ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாக தொடர ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஒப்புதல்

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி), தொடர்ந்து 11வது முறையாக ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.50% ஆக வைத்திருக்க முடிவு செய்தது.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், “கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் ஆரோக்கியமான முறையில் வளர்ந்து வருகிறது. ஆர்பிஐ மற்றும் நிதிக் கொள்கைக் குழுவின் (எம்பிசி) முடிவுகள் முறையாக பின்பற்றப்படுவதே இதற்குக் காரணம்.

உயர் பணவீக்கம் மற்றும் ஜிடிபி சரிவுக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாக வைத்துள்ளது. கொள்கையின் நடுநிலை நிலைப்பாட்டைத் தொடரவும், பணவீக்கம் மற்றும் வளர்ச்சியைப் பற்றிய கண்ணோட்டத்தைக் கண்காணிக்கவும் வட்டி விகிதம் மாறாமல் வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2023 பிப்ரவரியில் ரெப்போ விகிதங்களை 6.5% ஆக எம்பிசி உயர்த்தியது.

வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில் பணவீக்கம் 4% என்ற அளவில் இருப்பதில் கவனம் செலுத்தவும் எம்பிசி ஒருமனதாக முடிவு செய்துள்ளது. வளர்ச்சி வேகத்தில் சமீபத்திய மந்தநிலையை எம்பிசி கவனத்தில் கொண்டுள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் பாதியிலும், அடுத்த ஆண்டும் வளர்ச்சி மீள்தன்மையுடன் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆர்பிஐ சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நெகிழ்வான பணவீக்க இலக்கு கட்டமைப்பைப் பின்பற்றுவதே எங்கள் நோக்கம். வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில் விலை ஸ்திரத்தன்மையைப் பேணுவதே ஆர்பிஐயின் திட்டம். பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரிவிற்கும் விலை நிலைத்தன்மை முக்கியமானது. அதே நேரத்தில், வளர்ச்சியும் மிக முக்கியமானது.

இந்தியாவில், வளர்ச்சி மற்றும் பணவீக்கப் பாதைகளில் சமீபத்தில் சில பிறழ்வுகள் இருந்தபோதிலும், பொருளாதாரம் முன்னேற்றத்தை நோக்கி நிலையான மற்றும் சீரான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

நிதிக் கொள்கை மிகவும் முக்கியமானது. ஏனெனில் அது மக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரிவையும், அது சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும், காய்கறி விற்பனையாளர்கள், நடுத்தர வர்க்கம் முதல் கார்ப்பரேட்கள் வரை, விவசாயிகள் மற்றும் வணிகம் வரை பரவலான தாக்கங்களைக் கொண்டுள்ளது.

குறைந்த ஜிடிபி வளர்ச்சி, பணவீக்கம் மற்றும் வங்கி அமைப்பில் இறுக்கமான பணப்புழக்க நிலை பற்றிய கவலைகள் போன்ற பொருளாதார சவால்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.