முதல்வர் பட்னாவிஸுக்கு அனைத்துவித ஒத்துழைப்பையும் வழங்குவேன் : ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு அனைத்துவித ஒத்துழைப்பையும் வழங்குவேன் என துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் நேற்று பதவியேற்றனர். பதவியேற்புக்குப் பிறகு தானே நகரில் உள்ள சிவசேனா தலைமையகமான ஆனந்த் ஆசிரமத்திற்கு ஏக்நாத் ஷிண்டே வருகை தந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஷிண்டே, “நான் முதல்வராக இருந்த காலம் மிகவும் வெற்றிகரமானது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் மகாயுதி அரசை உறுதியாக ஆதரித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி.

மகாயுதி கூட்டணி பெரும்பான்மையை மட்டும் பெறவில்லை. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரைப் பெறுவதற்கு போதுமான எண்ணிக்கையைக் கூட எதிர்கட்சிகளுக்கு மக்கள் கொடுக்கவில்லை. நான் முதல்வராக இருந்தபோது, பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் இருவரும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். நாங்கள் ஒரு குழுவாக பணியாற்றினோம்.

பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் எப்படி எனக்கு ஒத்துழைத்தார்களோ அப்படியே நான் முதல்வர் பட்னாவிஸ்க்கு அனைத்து ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவேன். நாங்கள் ஒரு குழுவாக செயல்படுவோம். 2022-ல் ​​39 சிவசேனா எம்.எல்.ஏக்கள் என்னுடன் வந்தார்கள். இன்று, கட்சிக்கு 57 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். உண்மையான சிவசேனா நாங்கள்தான் என்பதற்கு மாநில மக்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.” என்று தெரிவித்தார். முதல்வர் பதவி வழங்கப்படாததால் வருத்தமடைந்தீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு இல்லை என ஷிண்டே திட்டவட்டமாக தெரிவித்தார்.