புதுக்கோட்டையில் 829 பயனாளிகளுக்கு ரூ.8.12 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று சென்னை, ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில், தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னதத் திட்டத்தின் கீழ் 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் கடனுதவிக்கான ஆணைகள், தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகள், நரிக்குறவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் ஆகியவற்றை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் கலந்துகொண்டு, 829 பயனாளிகளுக்கு ரூ.8.12 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்கள் நல்வாழ்வு வாழ்ந்திடும் வகையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், ஆதி திராவிடர் இன மக்களுக்கு தையல் இயந்திரங்கள், அம்பேத்கர் கலப்பு திருமண நிதியுதவி, கல்வி உதவித்தொகைகள், ஆதிதிராவிடர் காலணிகளுக்கு அடிப்படை வசதிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, 829 பயனாளிகளுக்கு ரூ.8.12 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் விலையில்லா தையல் இயந்திரமும், வன்கொடுமை தடுப்புச் சட்டம் தீருதவித் தொகையும், தாட்கோ துறையின் மூலம் முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டமும், தூய்மை பணியாளர் நலவாரிய நலத்திட்டம், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையும், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், தமிழ்நாடு தொழில் வணிகத்துறை, மாவட்ட தொழில் மையம் மூலம் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டமும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி திட்டமும், வேளாண்மை – உழவர் நலத்துறையின் மூலம் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், வேளாண் இயந்திரங்கள் வழங்கும் திட்டம், ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டமும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் இ-பட்டா, சான்றிதழ்களும், தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் மூலம் காய்கனி விற்பனை வண்டி திட்டம், சொட்டுநீர் பாசனம் திட்டம், காளான் வளர்ப்பு திட்டமும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் வங்கி கடன் இணைப்பு திட்டம், சமுதாய முதலீட்டு நிதியும் என 375 பயனாளிகளுக்கு ரூ.8,05,73,761 மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மேலும், புதுக்கோட்டை மாநகராட்சியின் சார்பில், கழிவு நீர் கால்வாய் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கும் திட்டம், தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் திட்டமும் என 436 பயனாளிகளுக்கு ரூ.3,00,000 மதிப்பீட்டிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மூலம் 18 பயனாளிகளுக்கு ரூ.3,60,000 மதிப்பீட்டிலும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில், டிசம்பர் 6 -ஆம் நாள் பாபாசாஹிப் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தினை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளின் சார்பில் ஆகமொத்தம் 829 பயனாளிகளுக்கு ரூ.8,12,33,761 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. எனவே தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் உரிய முறையில் பெற்று தங்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

பின்னர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், ஆயுதப்படை காவலர் நல சமுதாயக் கூடத்தில், தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டு, சமபந்தி விருந்தில் இன்றையதினம் கலந்துகொண்டு உணவருந்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், துணை மேயர் எம்.லியாகத் அலி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர்பாஷா, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் தவ.பாஞ்சாலன், புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் த.நாராயணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சே.கி.குணசேகரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் த.சந்திரசேகரன், கல்லூரி முதல்வர் (பொ) ஞானஜோதி, தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் பி.தெய்வாணை, வட்டாட்சியர் பரணி, மண்டல துணை வட்டாட்சியர் ஆ.லட்சுமணன், செந்தாமரை பாலு, எம்.எம்.பாலு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.