விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டத்தை டெல்லி அருகே ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்திய போலீஸார், தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.
வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லிக்கு செல்வோம்’ (டெல்லி சலோ) போராட்டத்தை பஞ்சாப் – ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு என்ற இடத்தில் இருந்து விவசாயிகள் இன்று மதியம் தொடங்கினர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் பங்கேற்றனர். டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி இந்தப் பேரணி செல்லும் என அவர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.
இதையடுத்து, விவசாயிகளை தடுத்து நிறுத்துவதற்காக அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவதற்கான ஏற்பாடுகளும், தண்ணீர் பீய்ச்சும் வாகனங்களும் தயாராக நிறுத்தப்பட்டிருந்தன. மேலும், ஹரியானாவின் அம்பாலா மாவட்டத்தில் 5 பேருக்கு மேல் கூட்டம் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாகச் செல்ல அனுமதி இல்லை என போலீஸார் தெரிவித்தனர். மேலும், சாலையின் குறுக்கே காங்கிரீட் தடுப்புகளை அமைத்து வாகனங்கள் செல்ல முடியாதவாறு சாலையை மறித்தனர்.
எனினும், விவசாயிகள் கைகளில் கொடிகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிக்கொண்டு பேரணியை தொடங்கினர். தேசிய நெடுஞ்சாலை 44-ல் வந்து கொண்டிருந்த அவர்கள், சில மீட்டர் தொலைவில் பாதையில் போலீஸாரால் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலியை அகற்றினர். இதனையடுத்து போலீஸார் அமைத்திருந்த காங்கிரீட் தடுப்பு அருகே வந்தபோது, அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை போலீஸார் வீசினர். இதையடுத்து, பலரும் சிதறி ஓடினர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 6 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து, ஷம்பு எல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்கத் தலைவர் சர்வான் சிங் பந்தர், “நாங்கள் டெல்லி நோக்கி செல்ல முடியாதவாறு போலீஸார் தடுக்கின்றனர். போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதில் விவசாய சங்கத் தலைவர்கள் 6 பேர் காயமடைந்துள்ளனர். எனவே, நாங்கள் எங்கள் பேரணியை நிறுத்தி வைத்துள்ளோம்” என தெரிவித்தார். டெல்லி அருகே ஷம்பு எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.