‘அதிமுக ஆட்சி மீது ஸ்டாலின் அவதூறு பரப்புவது கண்டனத்திற்குரியது’ – இபிஎஸ் பேச்சு

கடந்த ஆட்சியில் அதிமுக நலத்திட்டங்கள் எதுவும் செய்யவில்லை என ஸ்டாலின் பத்திரிகை மற்றும் ஊடகத்தின் வாயிலாக செய்திகளை பரப்பி வருகிறார். இது கண்டனத்துக்குரியது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினர்.

அதிமுக கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான, தாமரை எஸ்.ராஜேந்திரனின் மகள் பார்கவியின் திருமணம் இன்று அரியலூரில் நடைபெற்றது. முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்னர் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழக முதல்வர் ஸ்டாலின் 2024 மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 வெற்றி பெற்றோம் என்று கூறி வருகிறார். ஆனால், அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று 100 சதவீதம் வெற்றியை பெற்றுள்ளது. அரியலூர் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது.

கடந்த ஆட்சியில் அதிமுக நலத்திட்டங்கள் எதுவும் செய்யவில்லை என ஸ்டாலின் பத்திரிகை மற்றும் ஊடகத்தின் வாயிலாக செய்திகளை பரப்பி வருகிறார். இது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியின்போது அரியலூருக்கு மருத்துவக் கல்லூரி உட்பட 14 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையம், அனைத்து பகுதிகளிலும் மேம்பாலங்கள், சாலைகள் என பல்வேறு நலத்திட்டங்களை எனது தலைமையிலான ஆட்சியில் செயல்படுத்தி உள்ளேன்.

விவசாயிகள் நலனில் அக்கறையோடு அதிமுக ஆட்சி செயல்பட்டது. விவசாயிகளை மீட்டெடுத்த ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான். காவேரி வேளாண் பாதுகாப்பு மண்டலம் அறிவித்து விவசாயிகளை எப்போதும் அரவணைத்துக் கொள்ளும் ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான். ஆனால் இதையெல்லாம் ஸ்டாலின் மறந்து பேசி வருகிறார். அவர் ஆட்சி பொறுப்பேற்ற 46 மாதத்தில் தமிழகத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட தொடங்க முடியவில்லை. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நலத்திட்டங்களை ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி ஆட்சி நடத்தி வருகிறார் என்பதுதான் உண்மை” என்று இபிஎஸ் கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கோகுல இந்திரா, காமராஜ், ப.மோகன், சின்னையா, கரூர் சின்னசாமி, கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.