மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அறிவுறுத்தல் படி சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக 100 மாணவர்கள், மாணவிகள் பங்கேற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ஆ.ரமேஷ், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் கு.செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழரசி, மருதாந்தலை அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வள்ளுவன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில், முதலமைச்சரின் பசுமை புத்தாக்க திட்ட ஜெரோலின் மேரி, புதுக்கோட்டை கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் குரு மாரிமுத்து, அறந்தாங்கி கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் இளையராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தேசிய பசுமைப் படையின் புதுக்கோட்டை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ச.ரெங்கராஜூ அனைவரையும் வரவேற்றார். நூறு மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மிதிவண்டி பேரணி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி கீழ ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி மற்றும் மேல ராஜ வீதி வழியாக மீண்டும் பழைய பேருந்து நிலையம் வந்து அடைந்தது. பேரணியில் நெகிழிப்பையை தவிர்ப்போம், துணிப்பையை பயன்படுத்துவோம், சுற்றுச்சூழல் காப்போம், மரம் நடுவோம், மழை வளம் பெருக்குவோம், பருவநிலை மாற்றத்தை முறியடிப்போம் போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய பசுமைப் படையின் புதுக்கோட்டை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ச.ரெங்கராஜு செய்திருந்தார்.