அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நூதன ஆர்ப்பாட்டம்

அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதானி கிரீன் நிறுவனம் மின்சார விநியோகத்துக்கான ஆர்டரை பெறுவதற்காக 4 மாநில அரசுகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதை காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரின் 9ம் நாளான இன்று, நாடாளுமன்றத்துக்கு வந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் இந்த விவகாரத்தை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் “மோடியும் அதானியும் ஒன்று” என பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “அதானி மீது விசாரணை நடத்த பிரதமர் மோடி அனுமதிக்க மாட்டார். ஏனெனில், அதானி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் பிறகு தானும் விசாரணைக்கு உட்பட வேண்டியது இருக்கும் என்பது அவருக்குத் தெரியும்.” என விமர்சித்தார்.

மக்களவைக்குள்ளும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, சம்பலுக்குச் செல்ல முயன்ற ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தியது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

சபாநாயகர் ஓம் பிர்லா அதற்கு அனுமதி அளிக்கவில்லை. கேள்வி நேரம் முக்கியம் என்றும் திட்டமிட்ட ரீதியில் அவை நடைபெறும் என்றும் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து, கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்றது.

நெடுஞ்சாலைத் துறை தொடர்பான ராஜஸ்தான் எம்பியின் கேள்விக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்தார். “புதிய விரைவுச் சாலையில் காணப்படும் குறைபாடுகள் ஒப்பந்ததாரர் மூலம் சரி செய்யப்பட்டு, மூன்று மாதங்களில் பணிகள் முடிக்கப்படும். தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். தவறு இழைத்தவர்கள் யராக இருந்தாலும் நாங்கள் விடமாட்டோம்.” என்று கூறினார்.

கேரளாவில் சாலை விபத்தில் ஐந்து மருத்துவ மாணவர்கள் உயிரிழந்தது குறித்து காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நிதின் கட்கரி, “எர்ணாகுளம் புறவழிச்சாலைக்கு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளோம். தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்து ஒரு கருப்பு புள்ளி. மக்கள் விதிகளை பின்பற்ற வேண்டும். இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. நாங்கள் அபராதத்தை உயர்த்தியுள்ளோம்.” என குறிப்பிட்டார்.

மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய பாஜக எம்பி சுதன்ஷு திரிவேதி, அதானி விவகாரம், ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி பாஜக ஆட்சியைக் குழிதோண்டிப் புதைக்க அந்நிய சக்திகள் முயல்வதாகக் குற்றம் சாட்டினார். சுதான்ஷு திரிவேதிக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், ஆனால் அவைத் தலைவர் அவரை தொடர்ந்து பேச அனுமதித்ததாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்த அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், “இது மிகவும் தீவிரமான பிரச்சினை மற்றும் அனைவரிடமிருந்தும் கருத்துகளைப் பெற வேண்டும் என்பதால் நான் நேரம் தருகிறேன். மிகப்பெரிய ஜனநாயக அரசை செயலிழக்கச் செய்வதை அனுமதிக்க முடியாது. நமது இறையாண்மைக்கு கேடு விளைவிக்கும், ஆபத்தான எந்த முயற்சியையும் எதிர்க்க இந்த சபை ஒன்றுபட வேண்டும். நான் சுதன்ஷு திரிவேதியை தொடர அனுமதிக்கிறேன்.” என்று குறிப்பிட்டார். எனினும், எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பு காரணமாக அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.