மழையால் சேதமான பொருட்களுடன் எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் வீடுவீடாக கணக்கெடுப்பு நடத்த அதிகாரிகளிடம் எம்எல்ஏ பேச்சுவார்த்தையில் வலியுறுத்தினார்.
புதுச்சேரியில் புயல் மழையால் பல பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்பட்டது. உப்பனாறு வாய்க்காலில் அதிக நீர் வந்ததால் நகரப்பகுதிகளில் கரையோரம் இருந்த உருளையன்பேட்டை தொகுதி கடும் பாதிப்புக்கு ஆளானது. குறிப்பாக இளங்கோ நகர், சாரதி நகர், சாந்தி நகர் உட்பட பல பகுதிகளில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து பொருட்களும் சேதமடைந்தன. இந்நிலையில் முதல் அமைச்சர் ரங்கசாமி ரேஷன்கார்டு தாரர்களுக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் அறிவித்தார்.
இந்நிலையில் உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ நேரு தலைமையில் பொதுமக்கள் ராஜா சிக்னல் சந்திப்பில் இன்று மறியலில் ஈடுபட்டனர். வீடுகளில் மழைநீர் புகுந்து பாதிக்கப்பட்ட பொருட்களை மினி லாரியில் ஏற்றி வந்து அதனுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரியில் முக்கிய பகுதிகளுக்கு மக்கள் செல்ல முடியாமல் நகரெங்கும் நெரிசல் ஏற்பட்டது.
அதையடுத்து அரசு அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு வந்து எம்எல்ஏவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ நேரு கூறுகையில், புதுச்சேரியில் மழை நீர் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். ரேஷன்கார்டுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணத்தை முதல்வர் அறிவித்தார். ஆனால் எங்கள் தொகுதியில் மழைநீர் வீடுகளில் புகுந்து பொருட்கள் பல நாசமாகி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் லட்சக்கணக்கில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வருவாய்த்துறை அதிகாரிகள் வெள்ளம் புகுந்த பகுதிகளில் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தவேண்டும். இழப்புகளுக்கு தகுந்த நிவாரணம் தர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம்” என்றார். பேச்சுவார்த்தை அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆளுநர், முதல்வருக்கு அவர் அளித்த மனுவில், “ஒவ்வொரு குடும்பத்திற்கும் லட்சக்கணக்கான ரூபாய் பெருமானம் உள்ள மேற்கண்ட பொருட்கள் சேதமடைந்து வீணாகிவிட்டது.
ஆகையால் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு அறிவித்துள்ள ரூ.5000 போதுமானதாக இருக்காது. பாதிப்படைந்தவர்களுக்கும் அதே நிவாரணம், பாதிப்படையாதவர்களுக்கும் அதே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லோருக்கும் ஒரே நிவாரணம் வழங்கப்படுவது என்பது சரியானதாக இல்லை. வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தி பாதிப்புக்கு ஏற்ப கூடுதல் நிவாரணம் தாருங்கள்” என குறிப்பிட்டிருந்தார்.