தமிழகத்துக்கு ரூ.2,000 கோடியை உடனே வழங்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் திமுக, காங். எம்பிக்கள் வலியுறுத்தல்

தமிழக முதல்வர் கேட்ட ரூ. 2 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக கட்சிகள் வலியுறுத்தின.

நாடாளுமன்ற மக்களவையில் இது தொடர்பாக உரையாற்றிய திமுக எம்பி டி.ஆர் பாலு, “ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்பட தமிழகத்தின் 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் புயல் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏழை எளிய மக்கள் மிகப் பெரிய துயரை சந்தித்துள்ளனர்.

சுமார் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 721 வீடுகள் சேதமடைந்துள்ளன. 963 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. பயிர்கள் ஏறக்குறைய அழிந்துவிட்டன. இதனால், இந்த ஆண்டு விவசாயிகள் தங்கள் ஆதாரத்தை இழந்துள்ளனர். 997 டிரான்ஸ்பார்மர்கள் சேதடைந்துள்ளன. இதனால் இப்பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான பஞ்சாயத்துக் கட்டிடங்கள் மற்றும் சமூக நலக்கூடங்கள் சேதமடைந்துள்ளன. 447 கிராம தண்ணீர் டேங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக துணை முதல்வர் உதயநதி, பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்ய முதற்கட்டமாக மத்திய அரசு ரூ. 2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் நேற்று கடிதம் எழுதி உள்ளார். இன்று பிரதமர் மோடியிடமும் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து விளக்கி உள்ளார்.

எனவே, புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு விரைவாக குழு ஒன்றை தமிழகத்துக்கு அனுப்பி, பாதிப்புகளை மதிப்பீடு செய்து நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று டி.ஆர் பாலு தெரிவித்தார்.

இதே விவகாரம் குறித்துப் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர், “ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல லட்சம் குடிசைகள் சேதமடைந்துள்ளன. 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஏரளமான ஆடு மாடுகள் உயிரிழந்துள்ளன. மத்திய அரசு ரூ. 2 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்குமாறு தமிழக முதல்வர் கோரியுள்ளார். இதற்கு முன் கடந்த 2016ல் ஏற்பட்ட வர்தா புயல், 2017, 2018 ஆண்டுகளில் ஏற்பட்ட புயல் காலங்களில் தமிழக அரசு மத்திய அரசிடம் ரூ. 43,993 கேட்டது. ஆனால், மத்திய அரசு ரூ. 1729 கோடி மட்டுமே தந்துள்ளது. மத்திய அரசு தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்ப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழகத்துக்கு உரிய நியாயத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தார். இது ஒரு வரலாற்றுத் தவறு. என்று மாணிக்கம் தாக்கூர் கண்டித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய திமுக எம்பி கனிமொழி, தமிழக அரசு கோரியுள்ள நிதி உதவியை மத்திய அரசு இந்த முறையாவது உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மாநிலங்களவையில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “ஃபெஞ்சல் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியைத் தாக்கியதால், தமிழகத்தில் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ததால், வெள்ளம் சூழ்ந்து, பயிர்கள் சேதமடைந்திருக்கின்றன. குறிப்பாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் வெள்ளம் மற்றும் மின்சாரம் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். மற்ற மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை, ஆனால் அவர்களின் படகுகளும், மீன்பிடி வலைகளும் சூறாவளி காற்றால் சேதமடைந்தருக்கின்றன. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. விளைந்த பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. காய்கறி மற்றும் பழங்களை சந்தைப்படுத்த முடியாமல் விளைபொருட்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளில் மழை நீர் புகுந்ததால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மீட்பு நடவடிக்கைகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரின் உதவியை நாடியுள்ளோம்.

உள்துறை அமைச்சர் மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களை விரைந்து வழங்கவும், சேதங்களை மதிப்பீடு செய்யவும் ஆய்வுக் குழுவை அனுப்பி, பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக தமிழக அரசுக்கு போதிய நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என வைகோ தெரிவித்துள்ளார்.