மத்திய, மாநில அரசுகள் போதிய நிதி ஒதுக்கீடு செய்து காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட 24-வது பிரதிநிதிகள் மாநாடு இன்று கீரனூரில் எழுச்சியுடன் தொடங்கியது. மாநாட்டுக் கோடியை மூத்த தோழர் சா.தோ.அருணோதயன் ஏற்றி வைத்தார். மாநாட்டிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், கே.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பாண்டிச்செல்வி ஆகியோர் தலைமை வகித்தனர். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர் வாசித்தார்.
மாநிலக்குழு உறுப்பினரும், வரவேற்புக்குழுத் தலைவருமான எம்.சின்னதுரை எம்எல்ஏ வரவேற்புரையாற்றினார். மாநாட்டை தொடங்கி வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் உரையாற்றினார். அரசியல் ஸ்தாபன அறிக்கையை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் முன்வைத்து உரையாற்றினார். வரவு-செலவு அறிக்கையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கண்ணம்மாள் வாசித்தார். தொடர்ந்து பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது.
மாநாட்டில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்ட மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மாவட்டத்திலேயே கிடைக்கும் இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் பயன்படுத்தி அரசு சார்பில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும்.
ஏழை, எளிய மக்களை கடன் வலையில் சிக்க வைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்பதோடு, பல்வேறு வகைகளிலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் நுண்நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதோடு, ஏழைக் குடும்பங்களுக்கு பொதுத்துறை வங்கிகள் மூலம் வட்டியில்லாத அல்லது மிகக்குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கி அவர்களைக் காப்பாற்ற வேண்டும். மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தில் உள்ள முறைகேடுகளைக் களைவதோடு, மத்திய அரசு திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கூலியையும், வேலை நாட்களையும் வழங்க வேண்டும். விண்ணப்பித்த அனைவருக்கும் வேலை அட்டை வழங்க வேண்டும்
மாவட்டம் முழுவதும் நிலவும் பல்வேறு வகையான தீண்டாமை வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு தமிழ்நாடு அரசும், காவல்துறையும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் மீதான வன்கொடுமையைத் தடுத்து நிறுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் வீடு இல்லாத அனைத்து ஏழைகளுக்கும் இலவச வீடும், மனைப்பட்டா இல்லாத அனைவருக்கும் இலவச மனைப்பட்டாவும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடந்த மாவட்ட மாநாடு நடைபெற்ற திருமயத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மாநாட்டுக் கொடியை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். திருவரங்குளம் ஒன்றியத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட முன்னாள் எம்எல்ஏ தோழர் எஸ்.ராஜசேகரன் நினைவாக கொண்டுவரப்பட்ட கொடிமரத்தை மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பெற்றுக்கொண்டர்.
திருமயம் ஒன்றியம் நைனாப்பட்டியில் இருந்து தியாகி அடைக்கப்பன் நினைவாக கொண்டுவரப்பட்ட சுடரை மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., அரிமளம் ஒன்றியம் நமுனை தியாகி சண்முகம் நினைவாக கொண்டுவரப்பட்ட சுடரை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் இருந்து தியாகி சிலுவைமுத்து நினைவாகக் கொண்டுவரப்பட்ட சுடரை மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் பெற்றுக்கொண்டார். அறந்தாங்கியில் இருந்து தோழர் எம்.முத்துராமலிங்கம் நினைவாக கொண்டுவரப்பட்ட சுடரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கண்ணம்மாள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் சார்பாக தோழர் பி.ராமலிங்கம் நினைவாக கொண்டுவரப்பட்ட சுடரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன் ஆகியோர் பெற்றுக்கொண்டார்.
மாநாட்டில் எஸ்.கவிவர்மன், என்.கண்ணம்மாள் ஆகியோர் எழுதிய ‘மக்கள் மனங்களில் வாழும் மகத்தான தலைவர் தோழர் ஆர்.கருப்பையா’ என்ற நூலை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட இளம் கம்யூனிஸ்ட் தோழர்கள் பெற்றுக்கொண்டனர்.