ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து பிரதமர் விசாரிப்பு – மத்தியக் குழுவை அனுப்பிட முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார்.

“தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார். பிரதமரிடம் ஏற்கெனவே எழுதிய கடிதத்தை குறிப்பிட்டு தமிழ்நாட்டின் கோரிக்கையை உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தினேன். பிரதமர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, “ஃபெஞ்சல் புயலால், தமிழ்நாட்டின் 14 மாவட்டங்கள் இதுவரை கண்டிராத அளவுக்கு பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. இதனால் ஒன்றரை கோடிக்கு மேல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 11 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

சாலைகள், பாலங்கள் என ஏராளமான முக்கிய கட்டுமானங்கள், உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. இந்த மிகப் பெரிய பாதிப்பைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு, தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடியாக முதற்கட்டமாக, 2,000 கோடி ரூபாய் அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்க வேண்டும்.” என்று முதல்வர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக முதல்வர் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் தொலைபேசி வாயிலாக என்னை தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.

மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம் தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி – புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள மத்தியக் குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன்.

தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை பிரதமர் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன்” என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.