புதுச்சேரி, காரைக்காலில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5,000 – ஃபெஞ்சல் புயல் நிவாரணம் அறிவிப்பு

புயல், மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள 3.54 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் விரைவில் செலுத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். மேலும் உயிரிழப்பு, வீடு பாதிப்பு, கால்நடை இழப்பு என அனைத்து நிவாரணத்துக்கும் ரூ. 210 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி இன்று கூறியதாவது : புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலால் இதுவரை இல்லாத அளவுக்கு மழை பொழிந்துள்ளது. கிட்டத்தட்ட 50 செமீ மழை பதிவானது. முகாம்கள் அமைக்கப்பட்டு உணவு வழங்கினோம், எம்எல்ஏக்களும் அந்தந்த பகுதிகளில் உணவு வழங்கினர். வருவாய்துறை சார்பில் 85 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தரப்பட்டன.

மீட்புப் பணியில் 12 பஸ்கள், 4 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டனர். அத்துடன் பேரிடர் மீட்பு படையினர் 55 பேர் இரு குழுக்களாக வந்தனர். அத்துடன் ராணுவத்தினர் 70 பேரும் மீட்புப் பணியில் உள்ளனர். நால்வர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காணாமல் போய் உள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் தரப்படும். 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.

அரசானது மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ. 5 ஆயிரம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய இடங்களில் பத்தாயிரம் ஹெக்டேர் பரப்பில் பயிர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கு ஹெக்டேருக்கு தலா ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்.

4 மாடுகள் இறந்துள்ளதால் தலா ரூ.40 ஆயிரமும், 16 கிடாரி கன்றுகள் இறந்துள்ளதால் தலா ரூ. 20 ஆயிரமும் தரப்படும். சேதமடைந்த 50 படகுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் தரப்படும். சேதமடைந்த 15 கூரைவீடுகள் கட்ட தலா ரூ.20 ஆயிரமும், பகுதியளவில் சேதமடைந்த பத்து வீடுகளுக்கு தலா பத்து ஆயிரமும் தரப்படும். இந்நிவாரணத்துக்கு ரூ.210 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆறு மூலம் வந்து பாகூரில் உட்புகுந்துள்ளது. வீடுர் அணை திறக்கப்பட்டு வில்லியனூர் ஆரியப்பாளையம் உள்ளிட்ட கரை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீடூர், சாத்தனூர் அணை திறப்புக்கு முன்பாக தகவல் தந்தனர். ஆனால், கூடுதல் நீர் வரத்தால் உட்புகுந்துள்ளது. மின்விநியோகம் நகரப்பகுதிகளில் தற்போது 90 சதவீதம் தரப்பட்டுள்ளது. மீதமுள்ள பத்து சதவீதமும் மாலைக்குள் தரப்பட்டுவிடும்.

கிராமப்பகுதிகளிலும் தரப்பட்டு வருகிறது. கார், டூவீலர் பாதிப்பு தொடர்பாக காப்பீட்டு நிறுவனங்களுடன் பேசி முடிவு எடுக்கப்படும். சாலைகள், பாலங்கள் என உட்கட்டமைப்பு சேதத்துக்கு முதல்கட்டமாக ரூ.100 கோடி மத்திய அரசிடம் கேட்டு தலைமைச்செயலர் கடிதம் அனுப்பியுள்ளார். மத்தியக்குழு வந்து பார்வையிடவும் கோரியுள்ளோம். ஒருவாரத்துக்குள் முழு கணக்கெடுப்பு நடத்தி நிதி தர கேட்போம் என்று முதல்வர் ரங்கசாமி கூறினார். பேட்டியின் போது அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், தலைமைச்செயலர் சரத்சவுகான், ஆட்சியர் குலோத்துங்கன் ஆகியோர் உடன் இருந்தனர்.