தருமபுரி மாவட்டம் அரூர் பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதோடு, 1,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட மரவள்ளி கிழங்கு மழை நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதிகளில் ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று 300 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்தது. இதனால் அரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளை சுற்றி வெள்ளம் பெறுக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அரூர் நகரை ஒட்டிச் செல்லும் வாணி ஆற்றில் 25 ஆண்டுகளுக்கு பின்பு பெருக்கெடுத்து ஓடிய மழை வெள்ளம் அரூர் நகரில் உள்ள ஆற்றோர வீதிகளில் அமைந்துள்ள வீடுகளில் புகுந்தது. மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அங்குள்ளவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் மற்றும் திருமண மண்டபங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காளிப்பேட்டை அருகே இன்று காலை சென்ற ஆவின் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அரூர், மாம்பாடி கிராமத்தில் இருந்த தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட நிலையில் மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலராக உள்ள திவ்யதர்ஷினி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.
பலத்த மழையின் காரணமாக அரூர் கோட்டத்திற்கு உட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், தென்கரைக்கோட்டை, ராமியம்பட்டி, புதுப்பட்டி, பாப்பம்பாடி ,கொக்கரப்பட்டி, உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 1000 ஏக்கர் மரவள்ளி கிழங்கு மழை நீரில் மூழ்கியது. அதேபோல் மஞ்சள் மற்றும் நெல் வயல்களும் நூற்றுக்கணக்கான ஏக்கர் மழை நீரில் மிதந்து கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பு ஆளாகியுள்ளனர்.
சித்தேரி மலைப்பகுதிக்கு செல்லும் சாலையில் பாறைகள் மற்றும் மண் சரிவுகள் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலையில் சித்தேரிமலையில் உள்ள சுமார் 35 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது .அரூர் துப்புரவு காலனி பணியாளர் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்த நிலையில், அங்குள்ளவர்களுக்கு பாதுகாப்பான இடம் மற்றும் உணவுகளை அளிப்பதை அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார் பார்வையிட்டு ஏற்பாடுகள் செய்தார்.