‘புயல் காலத்திலும் தலைநகர் சென்னை இப்போது நிம்மதியாக இருக்கிறது’ – முதல்வர் ஸ்டாலின்

“அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது. புயல் காலத்திலும் தலைநகர் சென்னை இப்போது நிம்மதியாக இருக்கிறது.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான “ஃபெஞ்சல் புயல்” காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததைத் தொடர்ந்து, உடனடியாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னை, சேப்பாக்கம், எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டார்.

கனமழை எச்சரிக்கையின் காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலிக் காட்சி வாயிலாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, மழை நீர் உடனடியாக வெளியேற்ற நடிவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைத்து, அவர்களுக்கு உணவு, பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர், தலைமைச் செயலகத்திற்கு சென்று உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, ராயபுரம், சூரியநாராயணன் தெருவில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த உணவுக்கூடத்திற்கு நேரில் சென்று, பொதுமக்களுக்கு வழங்குவதற்காக உணவு தயாரிக்கப்படும் பணிகளையும், பூக்கடை பேருந்து நிலையம் மற்றும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகிய இடங்களில் உள்ள கழிவுநீர் உந்து நிலையத்திற்கு நேரில் சென்று, மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேற்றப்படும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, மழைநீரை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.

தொடர்ந்து, கனமழை பாதிப்புகள் குறித்து சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் ஆய்வு செய்தார். கொளத்தூர் செல்வி நகரில் மக்களை சந்தித்து குறைகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது. புயல் காலத்தில் தலைநகர் சென்னை இப்போது நிம்மதியாக இருக்கிறது. சென்னையில் வழக்கமாக மழைநீர் தேங்கும் இடங்களில் இந்த முறை தண்ணீர் தேங்கவில்லை. மழை பெய்யும் போது சில இடங்களில் மழைநீர் தேங்கினாலும், மழை நின்றதும் வடிந்து விட்டது. சென்னையில் இன்னும் மழை நிற்கவில்லை. முழுமையாக மழை நின்றதும் அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிந்துவிடும்.

விழுப்புரத்தில், மின்சார பிரச்சினை உள்ளதால் அமைச்சர், அதிகாரிகளை அங்கு அனுப்பி வைத்துள்ளோம். மின்சாரத்துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர் அங்கு உள்ளனர். அதிகாரிகளும் உள்ளனர்.” என்றார்.

அப்போது, “எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ‘எந்தப் பிரச்சினை என்றாலும் நான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் களத்தில் இறங்கி மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறோம்.. ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை பாதிப்புகளை அரசு திறமையோடு கையாண்டு வருகிறது. அவர் குற்றச்சாட்டை நாங்கள் மதிப்பதே இல்லை. கவலைப்படுவதும் இல்லை.’ என்றார்.

வானிலை ஆய்வு மையத்தின் தகவல்கள் துல்லியமாக இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், “வானிலையை ஓரளவுக்குதான் கணிக்க முடியும். புயலின் வேகம் குறைந்து ஒரே இடத்தில் நிற்பதை எப்படி முன்கூட்டியே கணிப்பது?. வானிலை மையம் கொடுக்கும் தகவல் அடிப்படையில்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்று முதல்வர் கூறினார்.