மோகனூர் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி உள்பட மூவர் உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ராசிபாளையம் காட்டூரைச் சேர்ந்தவர் விவசாயி மலையண்ணன் (70). இவர் இன்று காலை தனது மனைவி நிர்மலா (55) மற்றும் உறவினர் செல்லம்மாள் (65) ஆகியோருடன் நடைப்பயிற்சிக்குச் சென்றுள்ளார். மோகனூர் – நாமக்கல் சாலையில் மூவரும் நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.
காட்டூர் பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது நாமக்கல்லில் இருந்து மோகனூர் நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மூவர் மீதும் மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட மலையண்ணன், அவரது மனைவி நிர்மலா, உறவினர் செல்லம்மாள் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற மோகனூர் போலீஸார் மூவரின் உடல்களையும் கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே படுகாயம் அடைந்த கார் ஓட்டுநரான மோகனூர் பாம்பாட்டி தெருவைச் சேர்ந்த மணிகண்டன் மீட்கப்பட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக மோகனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் கணவன், மனைவி உள்பட மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.