ருவாண்டாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி

இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு ருவாண்டா நாட்டுக்கு தப்பியோடிய சல்மான் ரெஹ்மான் கான் என்ற பயங்கரவாதியை இன்டர்போல் உதவியுடன் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது.

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதற்கான போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட (2018-2022) சல்மான் ரெஹ்மான் கான், சிறையில் இருந்து வெளியே வந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார். லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் உறுப்பினராக இருந்த சல்மான் ரெஹ்மான் கான், பெங்களூருவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களை வழங்க உதவினார் என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

சல்மான் ரெஹ்மான் கான் தொடர்பான வழக்கு விசாரணையை பெங்களூரு நகர காவல்துறையிடம் இருந்து எடுத்துக் கொண்ட என்ஐஏ, அவருக்கு எதிராக கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 25 அன்று வழக்குப் பதிவு செய்தது.

இதையடுத்து, ஆகஸ்ட் 2, 2024 அன்று சல்மான் ரெஹ்மான் கானுக்கு எதிராக இன்டர்போல் ரெட் நோட்டீஸ் வழங்கியது. இதன் காரணமாக சல்மான் ரெஹ்மான் கான் தீவிரமாக கண்காணிக்கப்பட்டார். இன்டர்போல் நேஷனல் சென்ட்ரல் பீரோ – கிகாலியின் உதவியுடன் சல்மான் ரெஹ்மான் கான் ருவாண்டாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இன்று அவர் என்ஐஏ குழுவால் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டார்.

இதனை தெரிவித்த சிபிஐ, 2021 முதல் 100 தேடப்படும் குற்றவாளிகள் இன்டர்போல் உதவியுடன் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டனர் என்றும் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 26 பேர் கொண்டுவரப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.