புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சிறுபான்மையினர் மக்களுக்கான பாரத பிரதமரின் புதிய 15 அம்ச திட்டம் குறித்து இரண்டாவது காலாண்டிற்கான ஆய்வுக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், சிறுபான்மையினர் மக்களுக்கான பாரத பிரதமரின் புதிய 15 அம்ச திட்டம் குறித்து, இரண்டாவது காலாண்டிற்கான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் இன்று நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது; தமிழக அரசு சிறுபான்மையினர் மக்களின் நலநிற்காக எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், உதவித்தொகைகள் வழங்குதல், நலவாரிய அட்டைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுபான்மையினர் மக்களுக்கான (இஸ்லாமியர், கிறித்துஸ்துவர், சீக்கியர், பார்சி, புத்த மதம்) பாரத பிரதமரின் புதிய, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட சேவைகளை சீராக கிடைக்கச் செய்தல், உருது மொழியை கற்பிப்பதற்கான பெரும் வசதிகள், ஊரக வீட்டு வசதி திட்டத்தில் சமஅளவு பங்கு, பொருளாதார நடவடிக்கைகளுக்கான கடன் உதவியை அதிகரிக்கச் செய்தல், மாநில மற்றும் மத்திய அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட 15 அம்ச திட்டத்தின் கீழ் இரண்டாவது காலாண்டிற்கான ஆய்வுக்கூட்டம் இன்றையதினம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக சென்றடைய அரசு துறை அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் சிறுபான்மையினர் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் சிறுபான்மையினர் நல திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் (Awarness Camp) நடத்திடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. எனவே, சிறுபான்மையினர் மக்களின் நலன் காக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுவரும் இதுபோன்ற நலத்திட்டங்களை சிறுபான்மையினர் மக்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர்பாஷா, முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் த.நந்தக்குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் புவனேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.