முதல்வரை கண்டித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் : பாமகவினர் கைது

தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது, வேறு வேலை இல்லாததால் அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸூக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்திருந்தார். மூத்த அரசியல்வாதியான ராமதாஸ் குறித்து இழிவாக பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்தும், மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பாமகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அந்தவகையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து இழிவாக கருத்து தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து பாமக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பாமகவினர், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர்.

அப்போது தடையை மீறி ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நுழைய முயன்ற பாமகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஆனாலும் போலீசாரை தள்ளிவிட்டு உள்ளே நுழைய முயன்றதால் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் கதவினை போலீஸார் இழுத்து மூடினர். ஆனால் போலீஸாரின் தடையை மீறி உள்ளே நுழைந்த பாமகவினர், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஸ்டாலினை கண்டித்து கோஷங்களை பாமகவினர் எழுப்பியதால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே மாவட்ட செயலாளர்கள் சிவகுமார் எம்எல்ஏ, ஜெயராஜ், பாலசக்தி, மாவட்டத்தலைவர் தங்கஜோதி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் புகழேந்தி, பழனிவேல் உள்ளிட்டோர் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் ‘விழுப்புரத்தில் 29ம் தேதி இட ஒதுக்கீட்டு போராளிகள் மணிமண்டப திறப்புவிழாவில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கிடு வழங்குவதற்கான சட்டத்தை நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தில் இயற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று தெரிவித்து விழுப்புரம் மாவட்ட ஒன்றியங்களில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தலைவர் தங்கஜோதி ”ராமதாஸ் குறித்த தன் கருத்துக்கு மன்னிப்பு கேட்கா விட்டால் வரும் 28, 29 ம் தேதிகளில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தர உள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விட மாட்டோம்” என்றார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாமக எம்.எல்.ஏ சிவகுமார் உள்ளிட்ட 73 பேரை போலீஸார் கைது செய்தனர்.