ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் பும்ரா 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பேட் செய்து 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பும்ரா 5 விக்கெட்டுகளை முதல் இன்னிங்ஸில் கைப்பற்றினார். அவரது அந்த அபார பந்துவீச்சு இந்த வெற்றியில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
46 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ராகுல் 77, படிக்கல் 25, ஜெய்ஸ்வால் 161, பந்த் மற்றும் துருவ் ஜூரெல் தலா 1 ரன் எடுத்தனர், கோலி 100 (நாட் அவுட்) மற்றும் நிதிஷ் ரெட்டி 38 (நாட் அவுட்) ரன்கள் எடுத்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் 487 ரன்களுக்கு இந்தியா டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 534 இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் கடைசி சில நிமிடங்கள் மட்டுமே எஞ்சி இருக்க ஆஸ்திரேலிய அணி இலக்கை விரட்டியது. மெக்ஸ்வீனி, கம்மின்ஸ் மற்றும் லபுஷேன் ஆகியோர் விக்கெட்டை இழந்தனர். 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை ஆஸி. இழந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவடைந்தது.
நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியதும் கவாஜா வெளியேறினார். ஸ்மித் மற்றும் ஹெட் இணைந்து அணியை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். இருப்பினும் 60 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மித் ஆட்டமிழந்தார். பின்னர் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் இணைந்து அதிரடியாக ரன் குவித்தனர். அது இந்திய அணிக்கு சவால் கொடுத்தது. அப்போது பும்ராவின் பந்து வீச்சில் ஹெட் ஆட்டமிழந்தார். அவர் 89 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து மார்ஷ், ஸ்டார்க், லயன் மற்றும் கேரி ஆகியோர் விக்கெட்டை இழந்தனர். ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 238 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 295 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸிலும் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதனால் ஆட்ட நாயகன் விருதை அவர் வென்றார். இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி டிசம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அணிக்குள் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.