சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் திமுகவினர் நடத்தும் தொடர் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அயோத்தி குப்பம் பகுதியில், திமுகவினர், மாற்றுக் கட்சியினரை தொடர்ந்து மிரட்டி தாக்குதல் நடத்துபவர்கள் மீது சென்னை மாநகர காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் திமுகவினர் நடத்தும் தொடர் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அயோத்தி குப்பம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் நடந்தது.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாமில் மேஜை அமைத்து, வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் தொடர்பாக பாஜகவினர் ஜனநாயக கடமையை ஆற்ற முயன்ற போது, திமுக பகுதி செயலாளர் காமராஜ், 116-வது திமுக வட்ட செயலாளர் சசி தூண்டுதலின் பேரில் அயோத்தி குப்பம் பகுதியில் பாஜக மீனவர் பிரிவு மாவட்ட தலைவர் ஜெகதீசனை திமுகவை சேர்ந்த ரவுடி விஷ்ணு இரும்பு கம்பியால் தாக்கி அவரது வண்டியையும் உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
காவல்துறையில் உடனடியாக புகார் அளித்தும் அப்பகுதியின் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உயரதிகாரிகள் அனுமதி இன்றி வழக்கு போட முடியாது. கைது செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் பாஜக நிர்வாகியை தாக்கிய திமுக ரவுடிகள் மீது கைது செய்ய நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக புகாரை பெற்றுக் கொண்டு சிஎஸ்ஆர் புகார் ரசீது கூட இதுவரை வழங்கப்படவில்லை.
மேலும் கடந்த ஆண்டு இதேபோன்று வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக கட்சிக் கொடியுடன் மேஜை அமைத்த பாஜக நிர்வாகி சுமன் என்பவர், திமுக வட்டச் செயலாளர் சசி மற்றும் ஜெயபிரகாஷ், ரஞ்சித் உள்ளிட்ட திமுகவினரால் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தனர். பாஜக கடும் போராட்டம் நடத்திய பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் நேற்று அதே அயோத்திக்குப்பம் பகுதியில் நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றி கழகத்தினரையும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான மேஜை அமைக்க கூடாது என்று திமுக ரவுடிகள் கும்பல் மிரட்டி உள்ளனர். ஆனால் மெரினா போலீஸார் திமுகவினருக்கு சாதகமாக பஞ்சாயத்து பேசி புகாரை பதிவு செய்யாமல் தமிழக வெற்றி கழகத்தினரை திருப்பி அனுப்பி உள்ளனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி, அயோத்தி குப்பம் பகுதியில், திமுகவினர், மாற்றுக் கட்சியினரை தொடர்ந்து மிரட்டி தாக்குதல் நடத்துவதற்கு பின்னணியாக செயல்பட்டு, ரவுடி ராஜ்ஜியம் நடத்தும் திமுக பகுதி செயலாளர் காமராஜ், 116-வது வட்டச் செயலாளர் சசி மீது சென்னை மாநகர காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக பாஜக மீனவர் பிரிவு மாவட்ட தலைவர் ஜெகதீசனை தாக்கிய திமுகவை சேர்ந்த ரவுடி விஷ்ணுவை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய சொந்த தொகுதியில் ஜனநாயகத்தை காப்பாற்றும் வகையில், சட்டத்தை நிலைநாட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க, உரிய வழிகாட்டுதலை சென்னை மாநகர காவல் துறை ஆணையருக்கு வழங்க வேண்டும்.” என்று ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார்.