திருப்பூரில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் 10வது மாநில பொதுக்குழு கூட்டத்தில் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எஸ்டிபிஐ கட்சியின் 10வது மாநில பொதுக்குழு கடந்த இரு தினங்களாக திருப்பூரில் நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில், கட்சியின் அடுத்த மூன்றாண்டுக்கான புதிய மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாநில நிர்வாகிகளை இன்று நடைபெற்ற பொதுக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வில் காலை 11 மணியளவில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயலாளர் ரியாஸ் பாரங்கிபேட் அறிவிப்பு செய்தார். அதன்படி எஸ்டிபிஐ கட்சியின் புதிய தமிழ் மாநில தலைவராக நெல்லை முபாரக், துணைத் தலைவர்களாக அப்துல் ஹமீது, அச உமர் பாரூக், பொதுச்செயலாளர்களாக நிஜாம் முகைதீன் (நிர்வாகம்), முகமது நஸ்ரூதீன் (அமைப்பு), பொருளாளராக முஸ்தபா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்தை குறிவைக்கும் நாசகார திட்டங்களை அனுமதிக்கக் கூடாது, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வேண்டும், சச்சார் கமிட்டியை போன்று தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களின் வாழ்நிலைகள் குறித்து அறிய கமிட்டியை அமைக்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிபடி முஸ்லிம் ஆயுள் சிறைக்கைதிகளை விரைவாக அதிகாரப்பூர்வமாக விடுதலை செய்ய வேண்டும், சிறுபான்மையினர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், சிறுபான்மை சமூக மக்களுக்காக தனி பட்ஜெட் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.