ஜானகி நூற்றாண்டு விழாவில் உடன் பயணித்த திரைக்கலைஞர்களை கவுரவித்த இபிஎஸ்

அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழா சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று ஜானகியுடன் திரைத் துறையில் பயணித்த சச்சு உள்ளிட்ட கலைஞர்களை கவுரவித்தார்.

அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழா சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு சாலை நெடுகிலும் தொண்டர்கள் கொடியசைத்து, மலர்கள் தூவி வரவேற்பு அளித்தனர். செண்டை மேளம், தவில், பறை இசை முழங்க, மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டத்துடன் வரவேற்பு அளித்தனர்.

விழாவில் பங்கேற்ற பழனிசாமி முதலில் எம்ஜிஆர் – ஜானகி ஆகியோரின் அறிய புகைப்படங்கள் இடம்பெற்ற புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் விழா மேடைக்கு வந்த பழனிசாமி, எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ஜானகியின் உருவப்படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். அதன் தொடர்ச்சியாக நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டார். ஜானகியுடன் திரைத்துறையில் பயணித்த ராஜஸ்ரீ, வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு ஜெயசித்ரா, குட்டி பத்மினி ஆகியவரை கௌரவித்து நினைவு பரிசு வழங்கினார்.

பின்னர் திரை துறையில் எம்ஜிஆர் ஜானகி சந்திப்பு முதல் எம்ஜிஆரின் அரசியல் வாழ்க்கையில் உறுதுணையாக ஜானகி இருந்தது மற்றும் அவர் முதல்வரானது வரையிலான நிகழ்வுகளை விளக்கும் குறும்படம் திரையிடப்பட்டது. விழாவில் திரை துறையைச் சார்ந்த நடிகர் ரஜினிகாந்தின் வாழ்த்து காணொளி ஒளிபரப்பப்பட்டது அதில் பேசிய ரஜினி “ஜானகி திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும்போது எம்ஜிஆர் இரண்டாம் கட்ட நடிகராக இருந்தார். இருப்பினும் இவர் எதிர்காலத்தில் உச்சத்தை தொடுவார் என்பதை கணித்த ஜானகி எம்ஜிஆரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கட்சிக்கு சிக்கல் வந்த போது பெரிய மனதுடன் அரசியலில் இருந்து விலகி அதிமுகவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றார்” என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து காணொளியில் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவர்களின் திருமணத்தின் போது ஜானகி வழங்கிய மோதிரம் மற்றும் விஜயகாந்துக்கு எம்ஜிஆர் திரைப்படத்தில் அணிந்து நடித்த கோட் மற்றும் டை வழங்கியது, எம்ஜிஆரின் பிரச்சார வாகனத்தை விஜயகாந்துக்கு வழங்கியது உள்ளிட்ட நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். அதனைத் தொடர்ந்து ஜானகியின் குடும்பத்தினர் சுதா விஜயகுமார் உள்ளிட்டவருடன் பழனிசாமி குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார். விழாவின் தொடர்ச்சியாக கவியரங்கம், மெல்லிசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், கேபி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கே.ஏ.செங்கோட்டையன், பா.வளர்மதி, கடம்பூர் ராஜு, வைகை செல்வன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.