ராசிபுரம் அருகே பேருந்து – லாரி மோதி விபத்து : மூவர் உயிரிழப்பு, 18 பேர் காயம்

ராசிபுரம் அருகே தனியார் பேருந்து டயர் வெடித்து நடந்த சாலை விபத்தில் ஒட்டுநர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர். 18 பேர் படுகாயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து ராசிபுரம் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது. பேருந்து மெட்டாலா அருகேயுள்ள கோரைக்கோடு பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, முன்புற டயர் பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ராசிபுரத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பேருந்தில் இருந்த பயணிகள் பலர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து தகவலறிந்த ராசிபுரம், நாமக்கல், ஆத்தூர், மங்களபுரம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்கள் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் ராசிபுரம் அருகேயுள்ள முருங்கப்பட்டி பகுதியை சேர்ந்த பேருந்து ஒட்டுநர் ரவி (56), பெயர் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க லாரியின் ஒட்டுநர், பேருந்தில் பயணம் செய்த ஆர்.புதுப்பட்டி பகுதியை சேர்ந்த அலமேலு (57) என்ற பெண் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக சேலம் மோகன்குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் ச.உமா, மாவட்ட எஸ்பி., ராஜேஸ்கண்ணன் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று முதலுதவி சிகிச்சையை பார்வையிட்டு மேல் சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இந்த விபத்து குறித்து மேலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.