கரூர் மாவட்டம் புலியூரில் வணிக வரித்துறை அலுவலக புதிய கட்டிட பூமி பூஜை நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டதை விட 55 நிமிடங்கள் முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்றார். இதனால் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ க.சிவகாமசுந்தரி வருகைக்காக 10 நிமிடங்கள் காத்திருந்தார். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே அமைச்சர் வந்து விட்டதால் தாமதமாகி விட்டதாக எம்எல்ஏ வருத்தம் தெரிவித்தார்.
கரூர் மாநகராட்சி பகுதியில் நூலக கூடுதல் கட்டிடம், பள்ளிகளில் குடிநீர் தொட்டி, கழிப்பிடங்கள், சமையலறை, சுற்றுச்சுவர், பள்ளி கட்டிட மராமத்து, பேவர் பிளாக் அமைத்தல் மற்றும் புலியூரில் வணிக வரித்துறை கட்டிடம் என ரூ.3.60 கோடி பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமை வகித்தார்.
காலை 6.30 மணி தொடங்கி, காலை 8.30 மணி வரை 6 நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி நிரல் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை செல்ல திட்டமிட்டிருந்ததால் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே சென்று நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு புறப்பட்டார்.
முதல் நிகழ்ச்சியாக கரூர் மாநகராட்சி வெங்கமேடு பெரியகுளத்து ப்பாளையம் கிளை நூலகத்திற்கு ரூ.22 லட்சத்தில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை காலை 6.30 என நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் 5 நிமிடங்கள் முன்னதாக காலை 6.25 மணிக்கு வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி காலை 6.30 மணிக்கே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புறப்பட்டார்.
2வது நிகழ்ச்சியாக பாலம்மாள்புரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ.2.60 லட்சத்தில் கழிப்பிடம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை காலை 6.50 என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் காலை 6.44 மணிக்கே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புறப்பட்டார். 3வது நிகழ்ச்சியாக பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 7.10 மணிக்கு ரூ.21 லட்சத்தில் பள்ளி கட்டிட மராம த்து, புதிதாக சமையல் அறை அமைத்தல் பணிக்கான பூமி பூஜை என குறிப்பிட்ட நிலையில் 5 நிமிடங்கள் முன்னதாக 7.05 மணிக்கே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அமைச்சர் புறப்பட்டார்.
ஜெயபிரகாஷ் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.24 லட்சத்தில் சுற்றுச்சுவர், கழிப்பிடம், பேவர் ப்ளாக் அமைக்கும் பணி, அதே பள்ளியில் ரூ.27 லட்சத்தில் சுற்றுச்சுவர், கழிப்பிடம், குடிநீர் தொட்டி, பேவர் ப்ளாக் அமைத்தல் பணிக்கான பூமி பூஜைகள் காலை 7.30 மணி என குறிப்பிடப்பட்டிருந்த காலை 7.15 மணிக்கு நிகழ்ச்சியை முடித்து கொண்டு புறப்பட்டார்.
பசுபதிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.25 லட்சத் தில் பள்ளிக் கட்டிட மராமத்து பணிகள் செய்தல், புதிய கழிப்பிடம் கட்டுதல் பணிக்கான பூமி பூஜை காலை 7.50 மணி என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் 7.30 மணிக்கு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அமைச்சர் செந்தில்பாலாஜி புறப்பட்டார்.
எம்எல்ஏக்கள் ரா.மாணிக்கம் (குளித்தலை), ரா.இளங்கோ (அரவக்குறிச்சி), கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் ப.சரவணன், மண்டலக்குழு தலைவர்கள் எஸ்.பி.கனகராஜ், ஆர்.எஸ்.ராஜா, கா.அன்பரசன், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வழக்கமாக கரூரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் 3 எம்எல்ஏக்களும் பங்கேற்கும் நிலையில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி கரூர் மாநகராட்சி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் இன்று பங்கேற்கவில்லை.
கரூர் மாவட்டம் புலியூரில் ரூ.2.39 கோடியில் கரூர் வணிக வரித்துறை 4 வரி விதிப்பு வட்ட மாநில வரி அலுவலர் அலுவலகம் கட்டுதல் பணிக்கான பூமி பூஜை காலை 8.30 மணி என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி காலை 7.35 மணிக்கே அங்கே சென்றுவிட்டார். அதனால் செல்லும் வழியில் பேரூராட்சி ஊழியர்கள் தூய்மைப் பணிகள் மேற்கொண்டிருந்தனர்.
புலியூர் பேரூராட்சி கிருஷ்ணராயபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்டது என்பதால் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ க.சிவகாமசுந்தரி வராத நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி 10 நிமிடங்களுக்கு மேல் அவருக்கு காத்திருந்தார். தகவல் அறிந்த சிவகாமசுந்தரி 7.45 மணிக்கு காரில் மிக வேகமாக வந்து இறங்கினார்.
நிகழ்ச்சி குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே அமைச்சர் வந்துவிட்டதால் தாமதத்திற்கு சிவகாமசுந்தரி வருத்தம் தெரிவித்தார். மேலும் வணிக வரித்துறை அதிகாரிகளும் நிகழ்ச்சிக்கு வரவில்லை. அமைச்சர் புறப்பட்ட பிறகே நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு அதிகாரிகள் வந்தனர். அமைச்சர் கோவை புறப்பட்டதால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு புறப்பட்டார்.
நிகழ்ச்சிக்காக கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை அழைத்துவர ஏற்பாடுகள் செய்திருந்த நிலையில் அமைச்சர் 1 மணி நேரத்திற்கு முன்னதாக வந்தால் என்ன செய்வது என திமுக நிர்வாகி ஒருவர் அங்கலாய்த்துக் கொண்டார். இதேபோல் மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் ஆர்.எஸ்.ராஜா பெரியகுளத்துப்பாளையம் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் பாலம்மாள்புரம் நிகழ்ச்சியில் இணைந்து கொண்டார்.