புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செயல்பட்டுவரும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தாய் சேய் நல கட்டுப்பாட்டு மையத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இன்று துவக்கி வைத்து பார்வையிட்டு, கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, தொலைபேசியில் கர்ப்பிணி பெண்களிடம் நலம் விசாரித்து ஆலோசனை வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் கர்ப்பிணி பெண்கள் தாய்மார்களின் நலனிற்காக எண்ணற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தாய் சேய் நலப் பணிகளை மேம்படுத்தவும், மகப்பேறு மரணம் மற்றும் சிசு மரணம் ஆகியவற்றை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இன்றையதினம் 24×7 மாவட்ட தாய் சேய் நல கட்டுப்பாட்டு மையம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிறப்பு கவனம் தேவைப்படும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிரசவ தேதி அருகாமையில் உள்ள கர்ப்பிணி பெண்களை கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்கவும், அவர்களை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை / அரசு மருத்துவமனை (சீமாங் மையங்கள்) மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முறையான கண்காணிப்புகளை மேற்கொள்ளவும், அவர்களுக்கு பிரசவத்தின் போதும், பிரசவத்திற்கு பின்னும் உரிய ஆலோசனைகளை வழங்கவும், குடும்ப நல முறைகள் மற்றும் குடும்ப கட்டுப்பாடு குறித்த வழிமுறைகளை விளக்கிக் கூறிடவும், மேலும் இந்த கர்ப்பிணி பெண்கள் உரிய சிகிச்சைக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்போது உரிய வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளவும் மாவட்ட அளவில் ‘24×7 மாவட்ட தாய் சேய் நல கட்டுப்பாட்டு மையம்” மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான தொலைபேசி எண் 04322-223355 மற்றும் அலைபேசி எண் 83000 84224 ஆகும்.
இந்த கட்டுப்பாட்டு மையம் 24×7 அளவில் செயல்படும் வகையில் செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த எண்களை தொடர்பு கொண்டு தாய் சேய் நலம் மற்றும் குடும்ப நலம் குறித்த உரிய ஆலோசனைகள் பெற்றுக்கொள்வதற்கும், மருத்துவமுறை கருக்கலைப்பு தொடர்பான ஆலோசனைகளுக்கும் மற்றும் மரு.முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் தொடர்பான ஆலோசனைகள் குறித்தும், மேலும் இது தொடர்பான புகார்கள் குறித்து தெரிவிக்கவும் மேற்கூறியுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். எனவே கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் அனைவரும் தமிழக அரசின் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி நல்வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.எஸ்.கலைவாணி, மாவட்ட சுகாதார அலுவலர்கள் மரு.ராம்கணேஷ் (புதுக்கோட்டை), மரு.விஜயகுமார் (அறந்தாங்கி), துணை இயக்குநர் (குடும்ப நலம்) மரு.ஏ.கோமதி, தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ்.செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.