மணிப்பூரில் தற்போது நிகழும் வன்முறைச் சம்பவங்களுக்கு முந்தைய காங்கிரஸ் அரசே காரணம் என்று பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.
மணிப்பூரில் நிகழும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த தலையிடக் கோரி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த செவ்வாய்கிழமை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், கார்கேவுக்கு 3 பக்க கடிதத்தை நட்டா எழுதியுள்ளார். அதில், “20 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியில் இருந்தபோது உள்ளூர் பிரச்சினைகளைக் கையாள்வதில் காங்கிரஸ் சந்தித்த மோசமான தோல்வியின் பாதிப்புகளில் இருந்து மணிப்பூர் இன்னமும் விடுபடவில்லை.
ஆனால், மத்தியிலும் மணிப்பூரிலும் உள்ள பாஜக அரசாங்கங்கள் மணிப்பூரில் வன்முறை ஏற்பட தொடங்கியது முதல் நிலைமையை கட்டுப்படுத்தவும், மக்களை பாதுகாக்கவும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வெளிநாட்டு போராளிகள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறுவதை காங்கிரஸ் அரசாங்கம் சட்டப்பூர்வமாக்கியது. இதற்கான ஒப்பந்தங்களில் அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுடன் கையெழுத்திட்டுள்ளார். இதையெல்லாம் கார்கே மறந்துவிட்டார்போலும்.
இந்த அறியப்பட்ட போராளித் தலைவர்கள், கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக நாட்டிலிருந்து தப்பி ஓடுகிறார்கள். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக நெறிமுறைகளில் உங்கள் அரசு ஏற்படுத்திய தோல்வியே, மணிப்பூரில் கடினமாக போராடி மீட்கப்பட்ட அமைதியை அழித்தது. மணிப்பூரை பல பத்தாண்டுகளுக்கு பின்னோக்கி இட்டுச் செல்வதற்கும், அராஜகத்தை கட்டவிழ்த்துவிட வேண்டும் என்று போராளிக் குழுக்களும், வன்முறை அமைப்புகளும் முயல்வதற்கு முக்கிய காரணம்.
காங்கிரஸைப் போலல்லாமல், இதுபோல் நிகழ பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருபோதும் அனுமதிக்காது. அரசாங்கத்துக்கு எதிரான தவறான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட புனைவுகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உங்கள் வார்த்தைகள் ஏற்படுத்தி இருக்கின்றன.
மோடி அரசாங்கத்தின் கீழ் பொருளாதாரம், பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, வளர்ச்சி வாய்ப்புகளுக்கான அணுகல் என அனைத்தும் கிடைத்து வருவதால் வடகிழக்கு பகுதி முழுமையான மாற்றத்தைக் கண்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பொய்யான வாக்குறுதிகளுக்கு எதிராக இரட்டை இன்ஜின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கங்களின் ஸ்திரத்தன்மையின் மீது மக்கள் மீண்டும் மீண்டும் நம்பிக்கை வைப்பதன் மூலம் அதன் பணிக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
இருப்பினும், இந்த முன்னேற்றங்களைப் புறக்கணித்து, நீங்களும் உங்கள் கட்சியும் வட கிழக்கையும் அதன் மக்களையும் அரசியல் லாபம் ஈட்டுவதற்கும், உங்களின் கேவலமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் பயன்படுத்த முடிவு செய்துள்ளீர்கள். மணிப்பூர் வரலாற்றில் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் ரத்தக்களரியான காலகட்டங்கள் இருந்தது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
90களில் மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். 2011-ல் மட்டும் மணிப்பூர் 120 நாட்களுக்கும் மேலாக முழு அடைப்பைக் கண்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் மணிப்பூரில் நடந்த வன்முறைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியபோது காங்கிரஸ் மரியாதையற்ற மற்றும் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்டதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்தியாவின் முன்னேற்றத்தை சீர்குலைக்க விரும்பும் வெளிநாட்டு சக்திகளை ஊக்குவிக்கும் காங்கிரஸ் தலைவர்களின் செயல்முறை உண்மையிலேயே கவலையளிக்கிறது” என பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.