புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்தும், மதிய உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் ஊராட்சிகளுக்கு ‘தமிழ்நாடு பைபர்நெட்” இணையவசதி வழங்குவது குறித்தும், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் இன்று நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக் குழந்தைகள் ஊட்டச்சத்து மிக்க ஆரோக்கியமான உணவுகளை உண்டு கல்வி பயில வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், இல்லம் தேடி கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்தும், மதிய உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் ஊராட்சிகளுக்கு ‘தமிழ்நாடு பைபர்நெட்” இணையவசதி வழங்குவது குறித்தும், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.
மேலும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ், மாவட்ட அளவில் 1,411 பள்ளிகளில் 60,697 மாணாக்கர்களும், மதிய உணவுத் திட்டத்தின்கீழ் 1,672 பள்ளிகளில் 1,56,022 மாணாக்கர்களும் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டம் தொடர்பாக அலுவலர்கள் பள்ளி மையங்களை ஆய்வு மேற்கொண்ட விவரம் குறித்து விவாதிக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில், பள்ளிக்கு வருகை தரும் மாணாக்கர்கள், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின்கீழ், காலை மற்றும் மதிய உணவுகளை உண்டு கல்வி பயில்வது குறித்தும், ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சரியான முறையில் தயார் செய்து மாணாக்கர்களுக்கு வழங்குவது குறித்தும், மாணாக்கர்களின் பள்ளி வருகைகள் குறித்தும் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் கூட்டம் நடைபெற்றது.
எனவே மாணாக்கர்கள் அனைவரும் பள்ளியில் கல்வி பயிலும்போது, காலை மற்றும் மதிய உணவுகள் உண்டு கல்வி பயில்வதை சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் உறுதி செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் ‘தமிழ்நாடு பைபர்நெட்” (TANFINET) என்ற சிறப்பு நோக்கு நிறுவனத்தின் மூலம் பாரத்நெட் திட்டத்தினை செயல்படுத்தி கண்ணாடி இழை வலைபின்னல் மூலம் விரைவான இணையவசதி மேம்படக்கூடிய அலைவரிசை வழங்கப்படுவதற்கான பணிகளை செயல்படுத்துவது குறித்தும் கூட்டம் நடைபெற்றது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கே.ஸ்ருதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) த.சசிகலா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எஸ்.ஜி.சீனிவாசன், கண்காணிப்பு குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வ.ஊ/கி.ஊ) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.