தஞ்சாவூர் அருகே வகுப்பறைக்குள் ஆசிரியை கொலை

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் வட்டம், சின்னமனையைச் சேர்ந்த முத்து என்பவரின் மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், சின்னமனையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதன் (30). இவருக்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, மதன் குடும்பத்தினர், ரமணியை பெண் கேட்டு அவரது வீட்டிற்குச் சென்றனர். ஆனால், மதனைப் பிடிக்கவில்லை என ரமணி கூறியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மதன், இன்று காலை ரமணி பணியாற்றி வந்த பள்ளிக்கு சென்றார். அங்கு வகுப்பறைக்குள் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த ரமணியின் கழுத்தில் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனையறிந்த மாணவர்கள் அலறி அடித்து வகுப்பறையை விட்டு வெளியில் ஓடி வருவதையறிந்த மற்ற ஆசிரியர்கள், அந்த வகுப்பறைக்குள் சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் ரமணி கிடந்தார்.

இதையடுத்து, அவர்கள், ரமணியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சேதுபாவசத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய மதனை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.