நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக நவம்பர் 24-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்துக் கட்சிக் கூட்டம் நவம்பர் 24-ம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதான குழு அறையில் நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறும் என்று கிரண் ரிஜிஜு அறிவித்திருந்தார். “மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், 2024 நவம்பர் 25 முதல் டிசம்பர் 20, 2024 வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார் என்று கிரண் ரிஜிஜு ஏற்கனவே அறிவித்திருந்தார்.
மேலும், நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு தினம் என்பதால், அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 75 வது ஆண்டு விழா, சம்விதன் சதன் மைய மண்டபத்தில் கொண்டாடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது, தற்போது நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணையில் உள்ள வக்ஃப் திருத்த மசோதாவை நிறைவேற்ற அரசு முயற்சி மேற்கொள்ளும். மேலும், இந்த அமர்வின் போது, ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை அரசாங்கம் அறிமுகப்படுத்தலாம்.
லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை உறுதி செய்யும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை தனது அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கூறி இருந்தார். “நாம் இப்போது ஒரு நாடு ஒரே தேர்தலை நோக்கிச் செயல்படுகிறோம். இது இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும். இந்தியாவின் வளங்கள் மீது சிறந்த விளைவைக் கொடுக்கும். வளர்ந்த இந்தியா என்ற கனவை அடைவதில் நாடு புதிய வேகத்தைப் பெறும். இன்று, இந்தியா ஒரே நாடு ஒரு சிவில் சட்டம் நோக்கி நகர்கிறது. அது ஒரு மதச்சார்பற்ற சிவில் சட்டம்” என்று பிரதமர் கூறினார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தும் யோசனையை காங்கிரஸ் நிராகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர், அனைவரின் நம்பிக்கையையும் நாடாளுமன்றத்தில் பெற வேண்டும் என்று அக்கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பிரதமர் மோடி என்ன சொன்னாரோ, அதை செய்ய மாட்டார். அவர் அனைவரின் நம்பிக்கையைப் பெற்று செயல்பட வேண்டும். அப்போதுதான் இது நடக்கும், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது சாத்தியமற்றது என தெரிவித்திருந்தார்.
வக்ஃப் திருத்த மசோதாக்கள் 2024க்கான நாடாளுமன்ற கூட்டுக் குழு, பல்வேறு மாநிலங்களின் கருத்துக்களை கேட்டு வருகிறது. அவர்களின் கேள்விகளுக்குத் தீர்வு காணவும், பொதுவான ஒருமித்த கருத்தைக் கண்டறியவும் தொடர்ந்து கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக, நவம்பர் 23ம் தேதி ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இந்த முடிவுகள் குறித்தும் இரு அவைகளிலும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.