“ரெய்டுக்கும் கைதுக்கும் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை. 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெல்லப்போகும் வலுவான வெற்றிக் கூட்டணி, அதிமுக தலைமையில் அமையும்,” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் வ.உ.சி.யின் 88-வது நினைவு நாளையொட்டி அவரது மணிமண்டபத்திலுள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வலுவான கூட்டணி, வெல்லப்போகும் கூட்டணி, வெற்றி கூட்டணி அமையும். கூட்டணியை அமைக்க பழனிச்சாமி சரியாக காய் நகர்த்தி கொண்டிருக்கிறார்.
அடுத்து ஒரு ரெய்டு நடந்தால் அதிமுகவை பாஜக வோடு இணைத்து விடுவார்கள் என உதயநிதி கூறியுள்ளார். ஆனால், ரெய்டுக்கும் கைதுக்கும் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை. போராளிகளை பார்த்து, படித்து போராளிகளுடன் இயக்கம் நடத்துபவர்கள் நாங்கள். 2026 தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக வந்த பிறகு தற்போதைய ஆட்சியால் கஷ்டப்படும் மக்களுக்கு நன்மை தரும் வழியை பழனிச்சாமி எடுப்பார். மக்கள் சிரமப்படாத வகையில் அனைத்து உதவிகளும் அதிமுக ஆட்சியில் செய்யப்படும். பழனிச்சாமியிடம் இருந்து உத்தரவுகள் வந்தால் அதனை திறம்பட செய்து முடிப்போம். எந்த முடிவாக இருந்தாலும் அவர் எடுப்பார்.
தற்போதைய ஆட்சியில் மின்சார துண்டிப்பு, மருத்துவர் மீது தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு அதிருப்தியில் மக்கள் உள்ளனர். தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க காவல் துறை திணறி வருகிறது. காவல் துறையை சுதந்திரமாக செயல்பட தற்போதைய ஆட்சி அனுமதிக்கவில்லை. காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டால் மட்டுமே குற்ற செயல்களை தடுக்க முடியும். அதிமுக ஆட்சியில் காவல் துறை ஸ்காட்லாந்து நாட்டின் காவல் துறையினருக்கு இணையாக செயல்பட்டனர்,” என்று ராஜேந்திர பாலாஜி கூறினார். அதிமுக கொள்கை பரப்பு துணை செயலர் சரவணபெருமாள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.