ஐயப்ப பக்தர்களை ஏற்றுவதற்காக இன்று அதிகாலை பம்பையில் இருந்து நிலக்கல் நோக்கிச் சென்ற கேரள அரசு பேருந்தில் திடீரென தீப்பற்றி முழுவதும் கருகியது. பேருந்தில் பக்தர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைக்காக கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனத்துக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் வரும் வாகனங்கள் அனைத்தும் நிலக்கல்லில் நிறுத்தப்படும். பின்பு அங்கிருந்து பக்தர்கள் கேரள அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் மூலம் 20 கிமீ. தூரம் உள்ள பம்பைக்கு செல்கின்றனர்.
கார் மற்றும் சிறிய ரக வாகனங்கள் மட்டுமே பம்பை வரை அனுமதிக்கப்படுகின்றன. இங்கு வரும் பக்தர்கள் பம்பை ஆற்றில் நீராடி 7 கிமீ. தூரம் உள்ள சன்னிதானத்துக்கு நடந்து சென்று சுவாமியை வழிபட்டு திரும்புகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு பக்தர்களை ஏற்றுவதற்காக கேரள அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதிகாலை என்பதால் இதில் ஓட்டுநரும், நடத்துனரும் மட்டுமே இருந்தனர். பேருந்து சாலக்கயத்துக்கு அருகே 30-ம் வளைவில் சென்ற போது என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் இஞ்சினை நிறுத்தி விட்டு கீழே குதித்தார். நடத்துனரும் பேருந்தில் இருந்து இறங்கி ஓடினார். சிறிது நேரத்தில் அந்தப் பேருந்து முழுவதுமாக தீ பற்றி பரவியது. இது குறித்து பம்பை, நிலக்கல் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் வருவதற்குள் பேருந்தின் பெரும்பான்மையான பாகங்கள் எரிந்து கருகியது.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், “பொதுவாக மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் கேரளா சார்பில் புதிய பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படும். தற்போது தீப்பற்றியது பழைய பேருந்து. ஐயப்ப பக்தர்கள் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் கேரள அரசு போக்குவரத்து கழகம் பக்தர்களின் பாதுகாப்பிலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான பேருந்துகளை இயக்க வேண்டும்” என்றனர்.