சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் ஏற்பாட்டில் எளியோர் எழுச்சி நாளையொட்டி 48 ஜோடியினருக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி சுங்கச்சாவடி பகுதியில் நடைபெற்றது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று இந்த திருமணங்களை நடத்தி வைத்தார். இதன்பின் அவர் பேசியதாவது:- எளியோர் எழுச்சி நாள் என்ற பெயரில் சென்னை வடக்கு மாவட்டம் சார்பாக 48 இணையர்களுக்கான திருமணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று உங்களை சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திருமண நிகழ்ச்சியில் 66 வகையான சீர்வரிசைகளை கொடுத்து 48 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்துள்ளோம். இதில் சில திருமணங்கள் காதல் திருமணங்கள் என்று சொன்னார்கள். இது சுயமரியாதை திருமணம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நல்ல நண்பர்களாக இருந்து நல்ல இணையர்களாக இருந்து உங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும்.
இப்போதெல்லாம் இந்த மாதிரி திருமணங்கள் தமிழ்நாடு முழுவதும் ஏராளம் நடக்கிறது. இதுதான் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் ஏற்படுத்தி உள்ள அந்த பண்பாட்டு புரட்சி. இதுபோன்ற பண்பாட்டு புரட்சியை இந்த மண்ணில் திராவிட இயக்கம் நடத்தி கொண்டிருக்கிற காரணத்தினால்தான் நம்மீது ஆரியர்களுக்கும், ஆரிய அடிமைகளுக்கும் நான் யாரை சொல்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். அடங்காத வயிற்றெரிச்சல் கோபம் வருகின்றது. அவர்களுடைய வயிற்றெரிச்சல் பற்றியும், கோபத்தை பற்றியும் நாம் அதிகம் கவலைப்பட தேவையில்லை. நமக்கு வேண்டியது எல்லாம் தமிழ் பண்பாடு-தமிழ் மொழி காக்கப்பட வேண்டும்.
தமிழர்களுடைய வாழ்வு உலக அளவில் சிறந்து விளங்கிட வேண்டும். இது தான் திராவிட இயக்கத்துடைய நம்முடைய முதலமைச்சரோட குறிக்கோள். அதன் அடிப்படையில் தான் முதலமைச்சர் பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதியான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 16 லட்சம் மகளிர் இந்த திட்டத்தின் மூலம் சென்ற செப்டம்பர் மாதம் முதல் மாதம் மாதம் ரூ.1000 பெற்று வருகின்றனர். இதையெல்லாம் மக்கள் மத்தியில் பேசணும். சொல்ல வேண்டும். இந்த திட்டங்களால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் தமிழ் பண்பாட்டினுடைய காவலராக விளங்குகிற ஆட்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் கலங்கி போய் உள்ளன.
குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நம்முடைய திட்டங்களை பார்த்து பயங்கரமாக கோபம் வருகிறது. வரத்தான் செய்யும். வேற வழியில்லை அவருக்கு. ஆனால் மக்கள் நம்முடைய திட்டங்களை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்த்து அவருக்கு கோபம் வருகிறது. எரிச்சல் வருகிறது. நமது முதலமைச்சரை மக்கள் வாழ்த்துகின்றனர். அதனால் அவருக்கு அந்த வயிற்றெரிச்சல் வந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அவர் இன்னொரு கேள்வி கேட்கிறார். ஏன் எல்லா திட்டத்துக்கும் கலைஞர் பெயரை வைக்கிறீர்கள் என்கிறார்.
தன்னுடைய 96-வது வயதுவரை தமிழ்நாட்டுக்காக தமிழ் மக்களுக்காக ஓயாது உழைத்த கலைஞரின் பெயரை சூட்டாமல் நாம் யார் பெயரை சூட்ட முடியும்? அவருக்கு இப்போது மோடி பெயரை வைக்கலாம் அல்லது அமித்ஷா பெயரை வைக்கலாம் என்பார். இவர் 3 மாதம் முன்பு என்ன சொன்னார். எந்த நேரத்திலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்றார். இப்போது சேலத்தில் 10 நாளுக்கு முன்பு ஐ.டி. ரெய்டு நடந்தது. ரெய்டு நடந்த அடுத்த நாளே சொல்கிறார். கூட்டணி பற்றி இப்போது பேச முடியாது. தேர்தல் நெருக்கத்தில் பேசிக் கொள்ளலாம் என்கிறார். இன்னும் ஒரு ரெய்டு நடந்தால் போதும் அ.தி.மு.க.வை பா.ஜ.க. வோடு இணைத்தாலும், இணைத்து விடுவார். அந்த அளவுக்கு இன்றைக்கு அ.தி.மு.க. நிலைமை உள்ளது. இதையெல்லாம் மக்களிடம் நீங்கள் பேச வேண்டும்.
வருகிற 2026 தேர்தல் மிக மிக முக்கியமாக தேர்தல். 2024-எம்.பி. தேர்தலில் மிகப்பெரிய சாதனை வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் தந்தார்கள். அதன் தொடர்ச்சியாக 2026-ல் குறைந்தது 200 தொகுதியில் வென்றாக வேண்டும் என தலைவர் அறிவுறுத்தி உள்ளார். அதற்கு நீங்கள் உங்களது பங்களிப்பை தர வேண்டும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, கலாநிதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஐட்ரீம் மூர்த்தி, கே.பி. சங்கர், எபிநேசர் மற்றும் இளைய அருணா, மனோகரன், இரா.கருணாநிதி, மருது கணேஷ், பாண்டி செல்வம், நரேந்திரன், சென்னை வடக்கு மாவட்ட தலைமை பொதுக்குழு உறுப்பினர் வே.சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.