நவ. 28, 29-ல் விழுப்புரத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின்

வரவிருக்கும் நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக விழுப்புரம் மாவட்டத்திற்குச் செல்ல இருப்பதாக திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம்: மாவட்டந்தோறும் கள ஆய்வு என்று நாமக்கல்லில் அறிவித்து, கோவை, விருதுநகர் மாவட்டங்களில் நேரடி ஆய்வை மேற்கொண்ட உங்களில் ஒருவனான நான், நவம்பர் 14, 15 தேதிகளில் அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களில் நேரடிக் கள ஆய்வை மேற்கொண்டு, இரு மாவட்ட மக்களுக்குமான திட்டங்களை வழங்கி, கழக உடன்பிறப்புகளுடனும் கலந்தாலோசனை நடத்தியது மனதுக்குப் பெரும் நிறைவைத் தந்தது.

நவம்பர் 15-ஆம் நாள் காலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான திருமாவளவன் விடுதியில் என்னை சந்தித்தார். அவருடைய நாடாளுமன்றத் தொகுதிக்குள்தான் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. கடந்த ஆண்டு பெரம்பலூரில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி, விரைவாக செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தபோதே, அந்த விழாவில் திருமாவளவன் எம்.பி உரையாற்றும்போது, அரியலூர் மாவட்டத்திற்கும் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தார். திராவிட மாடல் அரசிடம் அவர் வைத்த கோரிக்கை ஓராண்டுக்குள் நிறைவேறி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா அமைவதற்கு தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

வழிநெடுக மக்கள் நின்று வரவேற்பளிப்பதை, இன்றைய அரசியல் களத்தில், ‘ரோடு ஷோ’ என்கிறார்கள். ஷோ என்றால் காட்சி எனப் பொருளாகும். நம்மைப் பொருத்தவரை, இது வெறும் காட்சியும் அல்ல, மக்கள் நமக்கு காட்சிப் பொருளுமல்ல. திராவிட மாடல் அரசின் நல்லாட்சிக்குக் கிடைக்கின்ற மகத்தான வரவேற்பு. திமுக அரசின் திட்டங்களால் பயன் பெற்று வரும் மக்களின் திருவிழாக் கொண்டாட்டம்.

ஜெயங்கொண்டத்திலிருந்து அரியலூருக்கு செல்லும் வழியெங்கும் மக்கள் திரண்டு நின்றனர். உங்களில் ஒருவனான என்னைப் பார்த்ததுமே மக்கள் மகிழ்ச்சியுடன் கையசைத்து, ஆரவாரம் செய்ததுடன், “இனி எப்போதும் நம்ம ஆட்சிதான்”, “திராவிட மாடல் ஆட்சி சூப்பர்.. அடுத்ததும் நாமதான்” என்றதுடன், 234 தொகுதிகளில் 200-க்கு மேல் நாம் வெற்றி பெறவேண்டும் என்ற இலக்குடன் நான் வலியுறுத்தி வருவதை மனதில் வைத்து, “நிச்சயம் 200 ஜெயிப்போம்” என்று உற்சாகக் குரலுடன் உத்தரவாதம் அளித்தனர்.

மக்கள் அளித்த உறுதியையும், அவர்கள் காட்டுகின்ற பாசத்தையும் பார்த்து பரவசமடைந்ததுடன், மக்களுக்கான திட்டங்கள் சரியாகப் போய்ச் சேர வேண்டியதை இத்தகைய கள ஆய்வுகள் மூலம் உறுதி செய்வதன் அவசியத்தையும் உணர்ந்தேன். இரு மாவட்ட அரசுத் திட்டங்களின் ஆய்வுப் பணிகளையும், கழகத்தின் ஆக்கப் பணிகளையும் நிறைவு செய்து, அரியலூர் -பெரம்பலூர் மக்கள் தந்த நம்பிக்கையால் மனநிறைவுடன் நவம்பர் 15 அன்று இரவு சென்னை வந்து சேர்ந்தேன். நவம்பர் 28, 29 தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்குச் செல்ல இருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் வந்து உடன்பிறப்புகளாம் உங்களைக் கண்டு மகிழ்வேன் என்று அந்த கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.