சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதிய மேல்சாந்தி நடைதிறந்து வழிபாடுகளை தொடங்கி வைத்தார் : பக்தர்கள் தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதிய மேல்சாந்தியான அருண்குமார் நம்பூதிரி இன்று அதிகாலை நடை திறந்து வழிபாடுகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெய் அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. நீண்டவரிசையில் காத்திருந்த பக்தர்கள் ஆர்வமுடன் ‘புலிவாகனனை’ தரிசனம் செய்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிச.26-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. இதற்காக நேற்று மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி மகேஷ்நம்பூதிரி நடை திறந்து விபூதி பிரசாதங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மஞ்சள்மாதா, கணபதி, நாகராஜா உள்ளிட்ட பரிவார கோயில்களின் சந்நதிகளும் திறக்கப்பட்டன. பின்பு ஐயப்பன் கோயிலில் இருந்து விளக்கு எடுத்துச் செல்லப்பட்டு 18-ம்படிக்கு கீழ்பதியில் உள்ள கற்பூர ஆழியில் ஜோதி ஏற்றப்பட்டது.

சபரிமலை மற்றும் மாளிகைப்புரத்தம்மன் கோயில் புதிய மேல்சாந்திகளான அருண்குமார் நம்பூதிரி, வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். பின்பு பூஜைகள் எதுவுமின்றி இரவு 11 மணிக்கு நடைசாத்தப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு மண்டல காலத்துக்கான முதல்நாள் வழிபாடு தொடங்கியது. இதற்காக புதிய மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோயில் நடையைத் திறந்தார். சூரியஉதயத்துக்கு முன்பு செய்யப்படும் உஷபூஜையினை தந்திரி கண்டரரு ராஜீவரு மேற்கொண்டார். பின்பு நைவேத்தியமாக இடித்து பிழிந்த கேரள பாயாசம் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், நெய் அபிஷேகம், கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. இந்நிலையில் இங்கு இலவச சிகிச்சை மையத்தினை தேவசம்போர்டு தலைவர் பிஎன்.பிரசாந்த் தொடங்கி வைத்தார். தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.